Saturday 9 October 2021

கேடினும் கேடு கெட்டவர்கள்!

 

                                                  நன்றி! வணக்கம் மலேசியா

வளர்ப்புப்  பிராணிகள் நம்மை அண்டி வாழ்பவை.  அவைகள் வாயில்லா ஜீவன்கள். நம்மில் பெரும்பாலோர் வீடுகளில் வளர்ப்பவை  என்றால் அது நாய்களும் பூனைகளும் தான்.

ஆனால் ஒரு சிலர் செய்கின்ற கொடூரச் செயல்கள் உண்மையில் நம்மை கலங்க வைக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னர் பூனைகளை எப்படியெல்லாம் கொன்று போட்டார்கள் என்பதை பத்திரிக்கைகள் வழி தெரிந்து கொண்டிருக்கிறோம். துணி துவைக்கும் இயந்திரங்களில் அவைகளைப் போட்டு துணிகளைத் துவைப்பது போல துவைத்துப் போட்டார்கள். இப்படியெல்லாம் கொடூரச் செயல்களை நாம் கேள்விப்பட்டதில்லை.

என்னதான் நமக்குப் பிடிக்காத ஒரு விலங்காக இருந்தாலும் இப்படியெல்லாம் செய்ய நமக்கு உரிமை இல்லை. வேண்டாம் என்றால் வளர்க்க வேண்டாம். அவ்வளவு தானே!

இப்போது "வணக்கம் மலேசியா" இதழில் வந்த செய்தி நமக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மனிதன் இந்த அளவுக்குக்  கொடூரமானவனா என்று யோசிக்க வைக்கிறது.

இறந்த போன ஒரு நாயின் மீது புலியைப் போன்று அதன் மீது சாயத்தைப் பூசி அதனைப் போகின்ற பாதையில் வீசிவிட்டுப் போயிருக்கின்றனர். அந்த நாய் உயிரோடு இருக்கும் போது சாயம் பூசப்பட்டதா  அல்லது அந்த நாய் செத்த பின்னர் சாயம் பூசாப்பட்டதா என்பது தெரியவில்லை.

செத்த பிறகு நாயைத் தொட யாரும் விரும்பமாட்டார்கள். அதனால் அது உயிரோடு இருக்கும் போதே சாயத்தைப் பூசி இருக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்பவர்கள் குடிகாரனாக இருக்க வேண்டும் அல்லது கஞ்சா அடிப்பவனாக இருக்க வேண்டும்.

எப்படியோ உண்மை தெரியவில்லை.  ஏன், எதற்காக என்று நமக்குப் புரியவில்லை. இதெல்லாம் ஏன் நடக்கிறது என்பதும் புரியவில்லை.

கோவிட்-19 தொற்று இன்று நாட்டு மக்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் தொடர்ந்து இந்த நோயினால் இறந்து கொண்டிருக்கிறார்கள். மக்களைப் பயமுறுத்த வந்த ஒரு நோய் என்று சொல்லப்படுகிறது. நல்லவர்களாக வாழுங்கள் என்கிற செய்தியை இந்த நோய் நமக்குச் சொல்லுகிறது.

ஆனால் மனிதன் எந்த நோயை அனுப்பினாலும் அவன் திருந்துவான் என்று சொல்லுவதற்கில்லை. அதற்கு இந்த நிகழ்வே சாட்சி. 

கேடினும் கேடு கெட்டவர்கள்!

No comments:

Post a Comment