Friday 5 July 2019

அடுத்த பிரதமர் யார்?

மலேசியர்கள்  வாய்  மூடி  மௌனிகளாக இருந்தாலும்  அரசியல்வாதிகள் விடுவதாக இல்லை!

பி.கே.ஆர். தலைவர்  அன்வார் இப்ராகிம் நாட்டின் அடுத்த பிரதமராக வரக் கூடாது  என்பதில் அக்கறை காட்டுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் அம்னோ அரசியல்வாதிகள். இப்போது அவர்களில் பலர் இந்நாள் பெர்சாத்து  கட்சி அரசியல்வாதிகள்! அதாவது  டாக்டர் மகாதிரின் வலப்பக்கம், இடப்பக்கம் அனைத்தும் அவர்கள் தான்!  அதனால் தான்  அவர்கள்  அடிக்கடி அன்வாரை தாக்கி அறிக்கை வெளியிடும் போது அது முக்கியத்துவம் பெருகிறது!

இவர்கள் அன்வாரை வெறுப்பதற்கான  காரணங்கள் என்னவாக இருக்கும்  என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஒரு சில விஷயங்கள் நமக்குப் புரியும்.

அன்வாருக்கும் மகாதிருக்கும் ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட கசப்புக்களும் அதன் பின்னர் அன்வார் பல ஆண்டுகள் சிறைவாசம்  அனுபவித்ததையும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். அந்தக் காலக் கட்டத்தில் டாகடர் மகாதிருடன் சேர்ந்து பல அம்னோ அமைச்சர்கள் அனவாருக்கு எதிராக இருந்தார்கள்.  அதாவது மகாதிருக்கு ஒத்து ஊதினார்கள்!  சரியோ, தவறோ அவர்கள் டாக்டர் மகாதீரை ஆதரித்தார்கள். அப்போது அந்தச் சூழலில் அவர்களுக்கு அது தான் சிறந்த முடிவாக இருந்தது.  தலைவன் யாரை ஆதரித்தாலும் நாமும் ஆதரிக்க வேண்டும்;  ஒதுக்கினால் நாமும் ஒதுக்க வேண்டும்.  அதைத் தான் அவர்கள் செய்தார்கள்.  அப்போது அது அவர்களுக்கு அது பலம். இப்போது அதே அவர்களுக்குப் பலவீனம்! 

இப்போது அவர்கள் கட்சி மாறினாலும் அவர்கள் இன்னும் டாக்டர் மகாதீரின் ஆதரவாளர்கள் தான்.    டாக்டர் மகாதிர் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை! அது நடந்து விட்டது!  எல்லாம் சரி. டாக்டர் மகாதிரே ஆட்சியில் இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால்  தாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் டாக்டர் மகாதிர் பதவி விலகி  தனது பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்க வேண்டும்.

இப்படி வரும் போது தான் "தங்கள் நிலை என்ன!" என்கிற பயம்  அன்வாரின் எதிர்ப்பாளர்களுக்கு வந்து விட்டது!  அதனால் தான்  எதிர்ப்புக்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்!  அன்வார் பிரதமராக வந்தால் தங்களை அடையாளம் தெரியாமல் செய்து விடுவார் என்கிற பயம் அவர்களுக்கு உண்டு!

இவர்கள் விரும்புகிறார்களோ, விரும்பவில்லையோ அன்வார் பழைய மனிதராக இல்லை என்பதும் மட்டும் உண்மை. பழி வாங்கும் குணம் எல்லாம் அவரிடமிருந்து பறந்தோடி விட்டது!  அந்தக் கால தீவிரத் தன்மை இப்போது அவரிடம் இல்லை!  சிறைவாசம் அவரைத் திருத்தி விட்டது எனலாம்.

நிச்சயமாக அடுத்த பிரதமர் அன்வார் இப்ராகிம் தான். அதில் ஏதும் மாற்றம் இல்லை.அவர் எல்லாருக்கும் நல்ல பிரதமராக இருப்பார் என நம்பலாம்.  நாம் விரும்புவதும் அதனைத் தான்!

No comments:

Post a Comment