Thursday 11 July 2019

அங்கீகாரம் உண்டா?

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அறிவியல் சாதனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.  உலகளவிலும்  சரி  நாடளவிலும் சரி  பல வெற்றிகள், பல தங்கப்பதக்கங்கள், இரண்டாம், மூன்றாம்  பரிசுகள் என்று அவர்களின் சாதனைகள் படர்ந்து விரிந்து கொண்டே இருக்கின்றன. 

நாம் அவர்களை வாழ்த்துகிறோம். இன்னும் பல சாதனைகள் புரிய இறைவனை வேண்டுகிறோம். .

ஆனால் இந்த நேரத்தில் ஒரு கேள்வி.  நாம் இவர்களின் சாதனைகளைப் பார்த்து பெருமை அடைகிறோம்.  நமது பிள்ளைகள் செய்கின்ற சாதனைகளைப் பார்க்கின்ற போது நமக்கு மகிழ்ச்சியே. 

இந்தப் பெருமை, மகிழ்ச்சி என்பதெல்லாம் நமக்குள்ளேயே முடங்கி விடுகிறதா அல்லது உரியவர்களிடம் போய்ச் சேருகிறதா என்பதையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. உரியவர்கள் என்கின்ற போது நாம் கல்வி அமைச்சைத்  தான் சொல்லுகிறோம். அல்லது கல்வி அமைச்சரோ, துணைக்கல்வி அமைச்சரோ - இவர்களைத்தான் நாம் உரியவர்கள் என்கிறோம். 

கல்வி அமைச்சின் அங்கீகாரம் இல்லாத வரை இந்தப் பெருமைகள்  அனைத்தும் நமக்குள்ளேயே வைத்துக் கொண்டு சிரித்து மகிழ்ந்து கொள்ள வேண்டியது தான்.  இந்தப் பெருமைகள் எல்லாம் பாடப் புத்தகங்களில் வர வேண்டும். இவைகளெல்லாம் நமது பிள்ளைகள் - நமது தமிழ்ப்பள்ளி பிள்ளைகள் சாதித்தவை - என்பது அனைத்து இன மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அறிந்து கொள்ள வேண்டும். குறைந்த வசதிகளை வைத்துக் கொண்டு நமது ஆசிரியர்கள் எந்த அளவுக்கு உற்சாகத்தோடு பணி புரிகிறார்கள் என்பதை தேசிய பள்ளி  ஆசிரியர்கள் உணர வேண்டும்.  இருக்கின்ற பள்ளிகளில் தேசியப் பள்ளிகள் தான் தரமற்ற கல்விக்கூடங்களாக  மாறி விட்டன என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

 தமிழ்ப்பள்ளிகள் தங்கப் பதக்கங்கள் பெற்றால் நமது தலைவர்களில் ஒருவரை அழைத்து அந்த மாணவர்களைக் கௌரவப்படுத்துவது  என்பது அந்தக் காலத்தில் ம.இ.கா. செய்த வேலை.  இப்போது நமக்கு அது வேண்டாம்.   நமக்குக் கல்வி அமைச்சரோ, துணைக்கல்வி அமைச்சரோ நமது  மாணவர்களைக் கௌரவப்படுத்த வேண்டும்.  அது தான் உரிய அங்கீகாரம்.  அது செய்திகளில் வரும்.  பாடப் புத்தகங்களிலும் வெளிவர உதவியாக இருக்கும். நமக்குள்ளேயே கும்மி அடித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை!

இன்றைய நிலையில் எந்த அளவுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்று நான் அறியவில்லை.  பத்திரிக்கைச் செய்திகளோடு சரி. வேறு அங்கீகாரம் உண்டா  என்று தெரியவில்லை.

உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

No comments:

Post a Comment