Sunday 21 July 2019

இது தான் வாழ்க்கை...!

ஞாயிறு  இதழ் ஒன்றில் ப்டித்த கட்டுரை ஒன்று மனதை அசைத்துப் பார்த்தது.

பிரபலமான கவிஞர் ஒருவர் தனது வயதான காலத்தில் ஓரு முதியோர் இல்லத்தில்  ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறியும் போது மனம் கனத்தது.

ஆனால் நமக்கு இது ஒன்றும் புதிதல்ல.  பலருடைய வாழ்க்கை இப்படித் தான் தங்களது இறுதி காலத்தில் முதியோர் இல்லங்களில்  கழிந்து  கொண்டிருக்கிறது. 

வயதாகும் போது மனைவி கூட இருந்தால் கணவனுக்குக் கொஞ்சம் பாதுகாப்பு.  மனைவி இறந்து போனால் அதுவும் இல்லை.

வசதிகளும், சொத்துக்களும் குவிந்து கிடந்தால் அனைத்தும் மாறும்  என்று சொன்னாலும்  அப்படி எதுவும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.  தமிழக முன்னாள் முதலைமைச்சர் ஒருவர் கை கால்கள் உடைக்கப்பட்டு தான் மாண்டு போனார்.  பணத்தால் என்ன செய்ய முடிந்தது? ஒரு நகைச்சுவை நடிகர் பசியாற ஓர் இட்டலிக்காக  நீதிமன்றம் ஏறினார். 

வயதான காலம் என்பது, விழிப்பாய் இராவிட்டால்,   சோகத்தில் தான் முடியும் என்பது எழுதப்படாத விதி.   முதியவர்களை வைத்துக் கொண்டு எந்த இளசுகளும் காலந்தள்ள தயாராக இலை என்பது தான் நிதர்சனம்.  

ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ஓய்வூதியம் வருகிறதா? பிழைத்தீர்கள்!  மாத வருமானத்தை இழக்க யாரும் தயாராக இல்லை. எனக்குத் தெரிந்த வயதானவர் ஒருவர் முன்னாள் அரசாங்க ஊழியர்.  அவருடைய வருமானத்தில் தான், மகன் தன் பெண்டாட்டி பிள்ளைகளுடன், ஒரு மகள் தனது மகளுடன், மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்!  அதே போல 96 வயதான பெரியவர் ஒருவர் தனது மகன் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்!  நண்பர் ஒருவர் மாதாமாதம் "சோக்சோ"  பணம் வருகிறது. அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை!

இப்போதைய தலைமுறை இலாப நஷ்டக் கணக்குப் போட்டு வாழ்கின்ற தலைமுறை.  வருமானம் தான் முக்கியம்.  இலாபம் இல்லாவிட்டால் வீதிக்கு அனுப்பத்  தயங்காத தலைமுறை. நாம் அப்படித்தானே அவர்களை வளர்த்திருக்கிறோம்!

ஒன்று மட்டும் சொல்வேன்.  முதியோர் இல்லத்தில் தங்குவதை  நான் தவறாக நினைக்கவில்லை. அது தான் அவரது விருப்பம் - வேறு வழியில்லை - என்றால் அதுவே நடக்கட்டும்.  அவர் எதிர்பார்க்கின்ற "கவிஞர்களின் சூழல்" இருந்தால் அதுவே சொர்க்கம்!  நாளிதழே இல்லாத இடத்தில் அதனை எதிர்பார்க்க முடியாது என்பதும் தெரிகிறது!

ஆனால் நாம் எங்கிருந்தாலும் அந்த இடத்தை நமக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டும். அதனை சொர்க்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியின் இருப்பிடமாக மாற்றி அமைக்க வேண்டும்.

நாம் எங்கிருந்தாலும் மகிழ்ச்சி என்பது நமது கையில்!

இது தான் வாழ்க்கை! இது தான் பயணம்!

No comments:

Post a Comment