Saturday 6 July 2019

அடுக்குமாடி வீடுகளா...!

அடுக்குமாடி வீடுகளைப் பற்றி பேசும் போது  நமக்குக் கொஞ்சம் அச்சமாகவே இருக்கும்.

மனிதர்கள் குடியிருக்க இப்படியெல்லாம்  வீடுகள் கட்டுவார்களா  என்று நினைத்து நினைத்து நாம் வேதனைப்பட வேண்டியுள்ளதே தவிர இதற்கு என்ன தான் முடிவு என்று நமக்கும் புரியவில்லை. 

  இந்த அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்ட  நோக்கம் தான் என்ன? இது போன்ற அடுக்குமாடி வீடுகள் யாருக்காக கட்டப்பட்டவை?  இப்படிக் கேளவிகளைக் கேட்டுக் கொண்டே போனால் ஒன்று நமக்குப் புரியும். இந்த வீடுகள் பணக்காரர்களுக்கோ, நடுத்தர குடும்பங்களுக்கோ கட்டப்பட்ட வீடுகள் அல்ல.  குறிப்பாக ஏழை, எளியவர்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் என்பது தான் உண்மை.  அந்த ஏழை, எளியவர்களுக்குக் கூட அந்த வீடுகள் சும்மா காசு இல்லாமல் கொடுக்கப்பட்ட வீடுகள் அல்ல.  எல்லாம் பணம் தான்.  அந்த ஏழைகளால் முடிந்தது அவ்வளவு தான். அதனால் தான் அவர்கள் வாங்கினார்கள். அதில் ஒன்றும் தப்பில்லை. 

 ஏழை மக்கள் வீடுகள் வாங்கிய  அந்தக்  காலக் கட்டத்தில் அதுவும்  பெரிய பணம் தான்!  நம்முடைய குற்றச்சாட்டெல்லாம் அந்த அடுக்ககங்களை வாங்கியவர்கள் ஏழைகள் என்பதற்காக தரமற்ற வீடுகளை அவர்கள் தலையில் கட்டினார்களோ என்று ஐயுற வேண்டியிருக்கிறது!  

முன்னாள் அரசாங்கத்தைப் பற்றி நமக்குத் தெரியும். வீடுகள் கட்டும் போது ஓர் அக்கறையின்மை தெரியும். "எப்படிக் கட்டினால் என்ன!" என்கிற  அலட்சிய மனோபாவம் அவர்களுக்கு உண்டு.  அதுவும் புதியவர்களை வைத்தே தரித்திரம் படைத்தவர்கள் அவர்கள்! பற்பல குறைபாடுகள். ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல!

குடி புகுந்த ஒரு சில ஆண்டுகளிலேயே கட்டடத்தில் ஆங்காங்கே  கீறல்கள்! ஒரு பகுதி இடிந்து விழுவதும் அதன் பின்னர் அதனைச் சரி செய்வதும் இது தான் அவர்கள் வேலை!

இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது  ஒன்றுண்டு.  அதாவது வீட்டைக் கட்டி முடித்ததும்  அத்தோடு அவர்கள்  வேலை  முடிந்தது.  அதன் பின்னர் அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை!  அவர்கள் பயன்படுத்தும் "லிஃப்ட்"  வேலை செய்யவில்லை என்றால் அதனால் அவர்கள் படும் கஷ்டம் ...சொல்லி மாளாது!  அது மட்டுமா?  தண்ணீர் பிரச்சனை மிகவும் கொடியது. பாவப்பட்ட மனிதர்கள்.  அவர்கள் ஏழைகள் என்பதால் என்னன்ன துன்பங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது! என்ன செய்வது? 

அங்குக் குடியிருப்பவர்களும் தங்கள் பொறுப்பு என்ன என்பதை உணர்வதில்லை.  குப்பைகளை கண்ட மாதிரி வீசுவதும் வீடுகளை அசுத்தமாக வைத்திருப்பதும், மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதும் - அவர்கள் மீதும் குற்றம் உண்டு.

நாம் ஏழையோ பாளையோ நமக்கும் பொறுப்புணர்ச்சி வேண்டும். நாம் ஏழை தானே தவிர குணத்தால் நாம் பணக்காரனாக இருக்க வேண்டும். படித்தவன் எப்படி இருக்கிறானோ அப்படித்தான் நாமும் இருக்க வேண்டும். இதில் ஏழை பணக்காரன் வேறுபாடுகள் இல்லை.

இந்த அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டதே ஒரு சோகக் கதை. அதை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது அதை விட சோகம். 

"கொண்டோமினியம்" கட்டுங்கள். "அபார்ட்மெண்ட்'  கட்டுங்கள். ஆனால் இந்த அடுக்குமாடி வீடு என்கின்ற அடுக்ககங்கள் வேண்டாம்!

No comments:

Post a Comment