Friday 19 July 2019

ஒன்றும் புரியவில்லை..!

நமது நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உண்டு. 

ஆனால் அது பற்றியெல்லாம் இப்போது மறந்துவிட்டு நாம் என்னன்னவோ செய்து கொண்டிருக்கிறோம்!  அடுத்த பிரதமர் யார் என்பதெல்லாம் முக்கியமானது தான்.  ஆனால் அது மட்டும் தான் இப்போது நம் முன்னே உள்ள பிரச்சனை என்று சிலர் பேசுவதும், சொல்லுவதும் எழுதுவதும் நமக்கே எரிச்சலை ஊட்டுகின்றன.

பிரதமர் பதவி என்பது எப்போதோ  அனைத்துக் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பிரச்சனை.  டாக்டர் மகாதிர் பதவி விலகும் போது, அது ஓராண்டு ஈராண்டுகளாக இருக்கலாம் -  அவர் தனது பிரதமர் பதவியை  அன்வாரிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வளவு தான்.  அனைத்துக் கட்சிகளாலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்வு. 

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பிரச்சனையை மீண்டும் மீண்டும் கிளரிக் கொண்டே இருந்தால் நாட்டில் வேறு பிரச்சனைகளே இல்லையோ என்று நமக்கே தோன்றுகிறது!

நாட்டில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்காமல் இப்படி "அடுத்த பிரதமர் யார்?" என்று பேசிக் கொண்டிருந்தால் "இந்த அரசாங்கம் என்ன செய்கிறது?" என்று தான் மக்கள் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருப்பார்கள்!.

நமக்குத் தெரிந்தவரை அடுத்த பிரதமர் யார் என்னும் பிரச்சனையில்  பின்னணியில் இருப்பவர்கள் அம்னோ - பாஸ் கட்சியினர் தான் என்பது புரிகிறது. அவர்கள் தொடக்கி வைத்தார்கள். இப்போது தொடக்கி வைத்தவன் தொடக்கி வைக்காதவன், வேண்டியவன் வேண்டாதவன்,  புரிந்தவன் புரியாதவன் - இப்படி அனைவருமே பெச ஆரம்பித்து விட்டார்கள்!

பேசுபவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள் அல்லது அரசியல் சார்புடையவர்கள். இவர்களின் நோக்கமே இந்த அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கக் கூடாது என்னும் கொள்கை உடையவர்கள். அதனால் அவர்கள் ஏதோ ஒரு வகையில் "யார் அடுத்த பிரதமர்" என்னும் விவாதத்தை மக்கள் முன் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்!  இவர்கள் நோக்கம் என்பதே அரசாங்கத்தை இயங்க முடியாதபடி செய்வது தான். அரசாங்கத்திற்குக் கெட்ட பெயரை ஏற்படுத்துவது தான். வேறோன்றுமில்லை!

ஆனால் இவைகளையெல்லாம் மீறி தான் டாக்டர் மகாதிர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், அது தான் அவரின் பலம். அவர் நல்லவரோ கெட்டவரோ நமக்குத் தெரியாது. அவர் தனது கடமைகளிலிருந்து தவறவில்லை.  தன்னுடைய அமைச்சர்களையும் கடமைகளிலிருந்து தவற விடவில்லை!

அரசாங்கம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் விளம்பரம் என்னவோ "யார் அடுத்த பிரதமர்?"  என்கிற விவாதத்திற்கு தான் கிடைக்கிறது!

சீக்கிரம் புரியும்!

No comments:

Post a Comment