Saturday 20 July 2019

சரவணபவன் அண்ணாச்சி....!

சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால் சமீபத்தில் காலமானார். 

நான் அவருடைய இருண்ட வரலாற்றுப் பக்கம் போகவில்லை.  ஜோதிடத்தின் மேல் அளவற்ற நம்பிக்கை வைத்தால் என்ன ஆகுமோ அது தான் அவருக்கு ஆயிற்று. அது போதும்!

அண்ணாச்சியின் இயற் பெயர் ராஜகோபால். உழைப்பால் உயர்ந்த மனிதர். உணவகத் துறையில்  மிகப் பெரிய வெற்றியாளர்.  ஈடு இணையற்றவர். மிகப் பெரிய ஜாம்பவான்.

அண்ணாச்சி மிக ஏழ்மையான வறிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.  தூத்துக்குடி  மாவட்டம் புன்னையடி கிராமம் அவரது ஊர். வறுமை காரணமாக ஏழாம் வகுப்போடு  தடைபட்டது அவரது கல்வி

அவரது முதல் வேலை உணவகத்தில் மேஜைகளைத் துடைப்பது.  அங்கு தான் அவர் தேநீர் போடவும் கற்றுக் கொண்டாராம்.  பகலிலே  மேஜைகள் துடைப்பது இரவிலே கட்டாந்தரையில் தூக்கம். அது சில காலம். 

அதன் பின்னர் மளிகைக் கடையில் உதவியாளர் வேலை.சில காலம் அது ஓடியது.  மளிகைக்கடை அனுபவத்தை வைத்து  தனது தந்தை, மைத்துனர் உதவியுடன் சொந்தமாக ஒரு மளிகைக்கடையைத் தொடங்கினார். பெரும் சவால்கள், சங்கடங்கள் எல்லாம் இருந்தன. முதல் முயற்சி என்பதால் சறுக்கல்கள், கிறுக்கல்கள் எல்லாம் இருந்தன. ஆனாலும் இளம் வயது அண்ணாச்சிக்கு தைரியம் மட்டும் அல்ல, தன்னம்பிக்கையும் அதிகம். அனைத்தையும் எதிர்கொண்டு எதிர் நீச்சல் அடித்து அனைத்தையும் முறியடித்தார்.

இந்த நேரத்தில் தனது கடைக்கு வந்த ஒரு விற்பனையாளர் கொடுத்த ஒரு யோசனை தான் உணவகம். அங்கிருந்து தான் தொடங்குகிறது அவரது உணவக சாம்ராஜ்யம் - சரவணபவ சைவ உணவகம்.

இப்போது நாடெங்கிலும்  33  கிளைகள், உலகெங்கிலும் 45 கிளைகளுடன் ஓர் உணவக சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறார் அண்ணாச்சி.  அவரிடம் அசாத்தியமான தன்னம்பிக்கை இருந்தது.  

அவருக்கென சில கோட்பாடுகளை அவர் வைத்திருந்தார், முதலாவது உணவில் தரம். வாடிக்கையாளர்களின் திருப்தி.  உணவகப் பணியாளர்களின் மேம்பாடான வேலைச் சூழல்.  பணியாளர்களுக்கான இருப்பிடம். ஊதிய உயர்வு.  சொந்த ஊர் செல்ல விடுமுறை. நோயுற்ற வேலையாள்களைக் கவனித்தல்,  குழைந்தைகளின் கல்விச் செலவு -  இப்படி பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியவர் அண்ணாச்சி. 

சாப்பாட்டுத் தட்டுகளின் மேல்  வாலை இலையை வைத்துப் பரிமாறும் முறையையும் அண்ணாச்சி தான் அறிமுகப்படுத்தினார்.  இன்றும் அது நடைமுறையில் இருக்கிறது. பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைப்பதே அதன் நோக்கம்.

அண்ணாச்சி ராஜகோபால் உழைப்பால் உயர்ந்த ஒரு மனிதர். கடும் உழைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. 

சரவணபவன் (சைவ உணவகம்) என்றால் அண்ணாச்சி ராஜகோபால் அவர்களின் ஞாபகம் வரும். வரத்தான் செய்யும்!

No comments:

Post a Comment