Friday 26 July 2019

வெட்டியாள் வேலை!

பொதுவாக மலேசியாவில் வெட்டியான் என்றாலே பலருக்குத் தெரியாது! காரணம் அப்படி ஒரு வேலை இருப்பதாகவே யாருக்கும் தெரிவதில்லை.

ஆனால் அதுவே இந்தியாவில் வெட்டியான் என்பதே ஏதோ ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் செய்கின்ற வேலையாகவே வகைப்படுத்துகின்றது. 

"வணக்கம் மலேசியா" இணைய தளத்தில் படித்த ஒரு செய்தி. 

"சுடுகாட்டில்  பிணம் எரிக்கும் தமிழ் நடிகை!" 

இந்தத் தலைப்பைப் படிக்கும் போது ஏதோ ஒரு தமிழ் நடிகை இப்போது வெட்டியாள் வேலை செய்கிறார் என்பதாகத்தான் நினைப்போம். அப்படித்தான் நினைக்க வேண்டும் என்பது தான் அந்த செய்தியாளரின் நோக்கம்.

அந்தச் செய்தியைப் படிக்கும் போது  தீபிகா என்னும் தமிழ் நடிகை வெட்டியாள் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அந்தச் செய்தி கூறுகிறது.

நமக்கு ஒன்றும் அதில் ஆட்சேபணை இல்லை. ஒரு நடிகை என்றால் எந்தக் கதாப்பாத்திரத்தையும் ஏற்று நடிக்கலாம். மலம் அள்ளும் கதாபாத்திரத்திலும் நடிக்கலாம். அது தான் நடிகைகளின் வேலை. 

ஆனால் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.  அவர் ஒரு தமிழ் நடிகை என்று குறிப்பிட்டு சொல்கிறார் அந்தச் செய்தியாளர்? அப்படி என்றால்? இந்த வேடத்தில் ஒரு தெலுங்கு நடிகை நடிக்க மாட்டார். ஒரு மலையாள நடிகை நடிக்க மாட்டார். ஒரு கன்னட நடிகை நடிக்க மாட்டர். ஆனால் அந்தக் கேவலமான வேடத்தில் ஒரு தமிழ் நடிகை நடிக்கிறார் என்பது தானே அர்த்தம்? 

அதாவது மானங்கெட்ட தமிழர்கள் தான் இந்த வேடத்தில் நடிப்பார்கள் என்பது தானே அவரது நோக்கம். சினிமாவில் பெண்கள் பலதரப்பட்ட வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.  விபச்சாரிகளாக, பிச்சைக்காரிகளாக, பிற கணவர்களை அபகரிப்பவர்களாக - பொதுவாக எத்தனையோ நாம் ஏற்றுக் கொள்ள முடியாத வேடங்களில் எல்லாம் நடித்திருக்கிறார்கள்.  அது அவர்களின் கடமை. தங்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளத்திற்காக அவர்கள் நடிக்கிறார்கள்.  நாம் என்ன அவர்கள் தெலுங்கர்களா, மலையாளிகளா, கன்னடர்களா, தமிழர்களா என்றா பார்த்தோம்? 

இந்தச் செய்தியை எழுதியவன் தமிழன் இல்லை என்று நமக்குத் தெரிகிறது.  தமிழர்களைக் கேவலப்படுத்துவது தான் அவனது நோக்கம் என்று தெரிகிறது. தமிழ் மண்ணில் இருந்து கொண்டு, தமிழ் மண்ணில் வயிறு வளர்த்துக் கொண்டு, வேறு போக்கிடம் இல்லாதவன் தமிழர்களைக் கேவலப்படுத்துகின்ற வேலையில் இறங்கியிருக்கின்றான். இது போன்ற செய்திகள் எல்லாம் தமிழர்கள் மீதான மறைமுக தாக்குதல் என்பதை நாம் மறக்கக் கூடாது. இப்போது இது மறைமுகமாக நடந்து கொண்டிருக்கிறது.

 இது போன்ற செய்திகளை வணக்கம் மலேசியா தவிர்க்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

No comments:

Post a Comment