Monday 15 July 2019

தன்னிகரற்ற தலைவன்..!

தமிழர்களின்  தன்னிகரற்ற அரசியல் தலைவன் என்றால் யாரைச் சொல்லுவது? அது காமராஜர் என்கிற மாபெரும் தலைவனைத்  தவிர வேறு யாராக இருக்க முடியும்?

அவரின் பிறந்த நாள் இன்று (15.7.2019).  இன்று தமிழ் நாட்டில் "நாங்கள் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம்!" என்று  அனைத்துக் கட்சியினராலும் ஏகோபித்தக் குரலில் உச்சரிக்கப்படும் பெயர் காமராஜர்.

இன்றைய அரசியல் தலைவர்கள் ஒன்றில் மட்டும் அவரிடமிருந்து வித்தியாசப்படுவர். பணம் மட்டுந்தான் என்கிறார்கள் இன்றைய அரசியல் தலைவர்கள். அவரோ பணம் மக்களிடம் தான் போய்ச் சேர வேண்டும் அரசியல்வாதிகளுக்கல்ல என்பது தான் அவரின் கொள்கை!

காமராஜரின் கொள்கைகள் மிகவும் சாதாரணமானவை. மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். குடிமக்கள் அனவருக்கும் தரமான வாழ்க்கை அமைய வேண்டும். பிள்ளைகள் அனைவருக்கும் தரமான கல்வியைக் கொடுக்க வேண்டும். படித்தவர் மாநிலமாக தமிழ் நாடு மாற வேண்டும்.  ஏழைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு கொடுத்தால் அவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்பன போன்ற கொள்கைகளை மனதில் கொண்டு காரியம்

அரசியல்வாதிகளில் தமிழ் நாட்டில் எத்தனை ஏரிகள், குட்டைகள், பாலங்கள் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் - இவைகள் அனைத்தையும் அறிந்து வைத்திருந்தவர் காமராஜர் மட்டுமே!  அவருக்குத் தெரிந்த அளவுக்கு வேறு எந்த அரசியல்வாதியும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் காட்டவில்லை! 

காமராஜர் எல்லாக் காலங்களிலும் களத்தில் நின்றவர்.   தனது கருத்துகளை அவர் சொல்லுவதில்லை.   உத்தரவு கொடுப்பதெல்லாம் அவர் பாணியல்ல.  பிரச்சனைகள் என்றால் உடனே அதனைத் தீர்க்க வேண்டும்.  தள்ளிப்போடும் பழக்கம் இல்லை. 

எப்போதும் அவர் தன்னை புரிந்து வைத்திருக்கிறார். தான் ஓர் அரசியல்வாதி என்பதை அவர் மறக்கவில்லை.  தனது வேலை,  மக்களுக்குச் சேவை செய்வது  மட்டுமே என்பதை அவர் அறிந்து வைத்திருக்கிறார். மக்களுக்குச் சேவை என்பது தான் அரசியல்.

அவரது சேவையால் மட்டுமே அவர் என்றென்றும் மக்கள் மனதில் நிற்கிறார்.   எழுத்தாற்றலோ, பேச்சாற்றலோ எதுவும் இல்லை! மக்களுக்கு என்ன தேவை என்று ஓடி ஓடி தெரிந்து கொண்டு வேலை செய்தவர். அதனால் தான் இன்று எல்லா அரசியல்வாதிகளாலும் போற்றப்படும் மாபெரும் அரசியல்வாதியாகத் திகழ்கிறார்.

இன்னும் பல ஆண்டுகள் அவர் பெயர் நம் மனதில் நிற்கும்!

No comments:

Post a Comment