நமது நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பது ஒன்றும் இரகசியமல்ல. பதினான்காவது பொதுத் தேர்தலின் போது எல்லாக் கட்சியினராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட வாய்மொழி ஒப்பந்தம் அடுத்த பிரதமர் அன்வார் இப்ராகிம் என்பது.
ஆனாலும் அது பற்றி தேவையற்ற பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இதனைத் தொடர்பவர்கள் யார்? இன்றைய பிரதமர் டாக்டர் மகாதிரின் ஆதரவாளர்கள் அல்லது அவரைச் சுற்றி இருக்கும் அவரது கட்சியினர்.
கடைசியாக இந்த அவசியமற்ற ஒரு கருத்தினை கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதிர் வெளியிட்டிருக்கிறார். அது தேவையற்ற ஒரு பேச்சு. அன்வார் இப்ராகிம் ஏதோ பதவிக்கு அலைபவர் போல ஒரு கருத்தினை உதித்திருக்கிறார்.
முக்ரிஸ் போன்றவர்கள் பேசாமலிருந்தாலே அது கட்சிக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. அவர் பேசுவது மற்றவர்களால் அதனை மகாதிரின் கருத்தாகவே ஏற்றுக்கொள்ளக் கூடும் என்பதை அவர் அறியாதவரா? ஆமாம், தந்தையின் கருத்தைத் தான் மகன் பிரதிபலிக்கின்றார் என்று தானே பொருள் கொள்ளப்படும். அப்படித் தானே மக்கள் நினைப்பர்? அப்படித்தான் நினைக்க வேண்டும் என்று முக்ரிஸ் நினைக்கிறாரா?
அடுத்த பிரதமர் யார் என்று பேச்சு எழும்போது முக்ரிஸ் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அவரது தந்தை பிரதமர் டாக்டர் மகாதிர் மீண்டும் மீண்டும் ஒன்றை நினைவுறுத்துகின்றார். "நேரம் வரும் போது பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிடம் ஒப்படைப்பேன்" என்று பலமுறை அவர் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறர். அது வீட்டின் அடுக்களையில் சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல! பொது மக்களுக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகள் என்பதை முக்ரிஸ் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை அது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பிடிக்கலாம். அது ஏன் நீட்டப்படுகிறது என்றால் நாட்டின் நிதி நிலைமை படு மோசமாக இருக்கும் போது அவர் அங்கிருந்து தப்பிக்க நினைக்கவில்லை! அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாட்டை நல்ல சூழலில் ஒப்படைக்க வேண்டும் என அவர் நினைக்கிறார்.
மகாதிர் பொறுப்பற்ற மனிதர் அல்ல. அதுவும் வயதான நிலையில் இன்னும் பொறுப்புள்ள மனிதராகவே அவர் நடந்து கொள்ளுவார்.
முக்ரிஸ் போன்றவர்கள் அன்வாரை விரும்பால் இருக்கலாம். ஏன், சென்ற பொதுத் தேர்தலின் போது டாக்டர் மகாதீரை எத்தனை பேர் விரும்பினார்கள்? மலாய் இனத்தவரைத் தவிர்த்து மற்ற இனத்தவர் அவருக்கு எதிராகத் தான் இருந்தார்கள். ஆனாலும் நஜிப் செய்த தவறுகளினால் டாக்டர் மகாதிரை மக்கள் ஆதரித்தார்கள். அதே போல இப்போதும் மகாதிரை விட அன்வாரே சிறந்த பிரதமராக வருவார் என்னும் நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.
அதனால் அன்வார் மீதான் தாக்குதலை முக்ரிஸ் போன்றவர்கள் கைவிட வேண்டும். உங்களால் பிரதமராக ஆக முடியாது என்பது எப்படி உண்மையோ அதே போல அன்வார் பிரதமராக வருவார் என்பதும் உண்மை.
முக்ரிஸ் உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment