Wednesday 10 July 2019

பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

பொதுவாக பிறந்த நாளை நான் அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை!

ஆனால் இன்று (10.7.2019)  நமது பிரதமரின் பிறந்த நாள்.  94- வது வயதில் அடி எடுத்து வைக்கிறார்.  இது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. 

மலேசியர்களின் சராசரி வயது  என்பது எண்பது வயதாக இருக்கலாம்.  அதுவும் நல்ல ஆரோக்கிய வாழ்க்கை அமைந்தவர்கள் நீண்ட நாள்கள் வாழ்கிறார்கள்.   ஆரோக்கிய மற்ற  வாழ்க்கை வாழ்பவர்கள், பலவித நோய்களை வைத்துக் கொண்டு, இழுத்துப்பறித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! 

அதற்காக டாக்டர் மகாதிர் எந்த வியாதியும் அற்றவர் என்று நாம் சொல்ல வரவில்லை.  அவரும் இருதய வியாதிக்குச் சிகிச்சை  பெற்றவர் தான்.   வியாதி இருந்தால் தான் அவன் மனிதன்!  ஆனால் அவர் வியாதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.  மனிதனுக்கு வியாதிகள் இருப்பது அதிசயமல்ல. ஆனால் அது அவனைக் கட்டிப் போடக் கூடாது.  நாம் மருந்து மாத்திரைகள், உடல் பயிற்சிகளின் மூலம் வியாதிகளைக் கட்டிப் போட்டுவிட்டு நமது வேலைகளை நாம் தொடர வேண்டியது தான்!

அரசியலிலிருந்து எப்போதோ விடை பெற்றவர் டாக்டர் மகாதிர்.  ஆனால் நாட்டின் நலன் கருதி அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தவர்.  வந்தது மட்டும் அல்லாமல் மீண்டும் பிரதமர் பதவியை ஏற்றவர். அதிலும் 93-வ்யதில் - யாரும் எதிர்பார்க்காத வயதில் - அவர் பிரதமர் பதவியை ஏற்றார்! உலகில் எங்கும் நடக்காத அதிசயம் இது! தள்ளாடி நடக்கும் வயதில்  துள்ளலாக நாட்டை வழி நடத்துகிறார்!  நாட்டின் மீதும், நாட்டின் மக்கள் மீதும் பற்றும், பாசமும் உள்ளவர்களுக்கு  எந்தக் காலத்திலும் தள்ளாட்டமும் இல்லை தள்ளாடி நடப்பதும் இல்லை!

அவர் இந்த வயதிலும் நாட்டை வழி நடத்துவதற்கான இரகசியம் என்ன? அவரின் நீண்ட ஆயுளுக்கு என்ன காரணம்?  அது தான் தனது மக்களை  நேசிப்பது. அவர் தொழில்  ரீதியில்  ஒரு  டாக்டர்  என்றாலும் அவர் அரசியலை விரும்பி ஏற்றுக் கொண்டவர். தனது  மக்கள்  மற்ற இனத்தாரைப்  போல முன்னேற  வேண்டும்  என்னும் உயரிய  நோக்கம் கொண்டவர். அவர் காலத்தில் தான்  மலாய் மக்களின் முன்னேற்றம் மிகவும் அசாத்தியமாக இருந்தது! மலாய்க்காரர்கள்  எல்லாத் துறைகளிலும் இன்று மிளிருவதற்கு அவர் தான் காரணம்.  அவரின் ஒரு சில திட்டங்கள் தோல்வியில் முடிந்திருக்கலாம். ஆனால் அவர் அதற்குப் பொறுப்பல்ல! அவரிடம் நேர்மை இருந்தது. நியாயம் இருந்தது.

ஒரு மனிதன் நீண்ட  நாள்  வாழ்வதற்கு அவன் செய்கின்ற தொழிலை அவன் நேசிக்க வேண்டும்.  அவன் விரும்புகின்ற தொழிலை அவன் செய்ய வேண்டும். அது தான் அவனை நீண்ட நாள் வைத்திருக்கும்.

பிரதமருக்கு நமது பிறந்த நாள் வாழ்த்துகள்!

No comments:

Post a Comment