புதியதோர் அரசியல் கட்சி இந்தியர்களுக்காக உதயமாகியிருக்கிறது! வாழ்த்துகள்!
அரசியல் கட்சிகள் ஆரம்பிப்பது என்பது சும்மா ஒரு பொழுது போக்காக ஆகி விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது!
புதிய அரசாங்கம் அமைந்த பிறகு இதற்கு முன்னர் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டு தோல்விகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என நம்புகிறேன்! அரசியல் கட்சிகள் மட்டும் அல்ல இன்னும் பல இந்தியர் சார்ந்த இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம் தேர்தல் காலங்களில் தங்களுக்கு ஏதேனும் போட்டியிட ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்னும் சிறிய ஆசை! சரி அது இல்லாவிட்டாலும் ஒரு செனட்டர் வாய்ப்பாவது கிடைக்கதா என்னும் நப்பாசை! கட்சி என்று ஒன்று இருந்தால் பேரம் பேசுவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கும். தனி ஆளாக இருந்தால் அலட்சியப்படுத்தப் படுவோம் என்று நமது "தலைவர்கள்" புரிந்து வைத்திருக்கிறார்கள்!
புதிய அரசாங்கம் அமைந்த பிறகு இந்தியர்களுக்குச் சேவை செய்ய பலர் முன் வ்ந்து விட்டனர். இதில் பலர் முன்னாள் திருடர்கள்! எந்தச் சூழ்நிலையிலும் இவர்களால் "கை" வைக்காமல் இருக்க முடியாது! கை அரித்துக் கொண்டே இருக்கும்! அது அவர்களின் பிறவி குணம்! இழிந்தவர்களின் இயல்பு அப்படித்தான் இருக்கும்!
இப்போது புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்திருப்பவர் வேறு யாருமல்ல நமது துணை அமைச்சர் பொன் வேதமூர்த்தி அவர்கள் தான். அவரைக் குறை சொல்லுவதற்கோ, சந்தேகப்படுவதற்கோ ஒன்றுமில்லை. அவரின் சேவையை நாடறியும். நாடறிந்த ஒரு போராட்ட வாதி. இந்தியர் சார்ந்த பிரச்சனைகளில் முன் நிற்பவர்.
அவருடைய கட்சியின் பெயர் "மலேசிய முன்னேற்றக் கட்சி" என்பதாகும். அதனை ம.மு.க. என்று சொன்னால் அது மக்கள் முற்போக்குக் கட்சி என்பதை ஞாபகப்படுத்தும். அது எந்த வகையில் மக்களை ஈர்க்கும் என்று சொல்லுவது கடினம். ஹின்ராப் என்பது அவரது சின்னம் என்று சொல்லலாம். அவரின் செல்வாக்கு என்று சொல்லலாம். ஹின்ராஃபையும், வேதமூர்த்தியையும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் உண்டு. அதனைப் பிரிந்து ம.மு.க. செல்வாக்குப் பெறுமா என்பது கேள்விக்குறியே!
அவரின் நோக்கம் நமக்குப் புரியவில்லை. அவருக்கு அமைச்சர் பதவி போனால் ம.மு.க. நிலைத்து நிற்குமா என்பது நமக்கும் இயல்பாக கேள்வி எழுகிறது. தனக்கென்று ஒரு கட்சி இருந்தால் தன்னுடைய அமைச்சர் வாழ்க்கைத் தொடரும் என்று அவர் நினைக்கிறரோ, தெரியவில்லை!
எல்லாவற்றுக்கும் மேலாக அவரின் சேவை மட்டுமே தான் கணக்கில் எடுக்கப்படும் என்பதை அவர் புரிந்து கொண்டால் சரி!
No comments:
Post a Comment