Monday, 15 July 2019

என்ன தண்டனை கொடுக்கலாம்?

மூன்று இந்தியத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக செம்பனைத் தோட்ட மொன்றில் வேலை வாங்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தியத் தொழிலாளர்களை இப்படி கொத்தடிமைகளாக நடத்தப்படுவது என்பது நமது நாட்டில் ஒன்றும் புதிது அல்ல.  சமீபத்தில் தான் உணவகம் ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களுக்குச் சம்பளம் தரவில்லை, அடித்து நொறுக்கப்பட்டனர் என்பதாக செய்தி ஒன்று வெளியாகியது.

இன்னும் பலர் இதுபோன்ற  கொத்தடிமைகள் நாடளவில் இருக்கத்தான் செய்வர்.  நாட்டில் கடுமையான சட்டதிட்டங்கள் இல்லையென்றால் இது நடக்கத்தான் செய்யும்!  அதுவும் முன்னால் அரசாங்கத்தில்  திருட்டு முதலாளிகள வெற்றிகரமாக தங்களது 'தொழிலைச்' செய்து வந்தனர்! அவர்களுக்குப் போதுமான பாதுகாப்புகள் வழங்கப்பட்டன.

ஆனால் அவர்களுக்கு இன்னும்  நல்ல  நேரம் நடந்து  கொண்டு தான் இருக்கிறது என்பதைத் தான்  மேற் கூறிய  சம்பவங்கள் மெய்ப்பிக்கின்றன. காரணம் திருட்டு முதலாளிகள் இன்னும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்!

வெளி நாடுகளிலிலிருந்து  தொழிலாளர்களை வரவழைத்து விமான நிலையத்திலேயே அவர்களுடைய  கடப்பிதழ்களைப் பறிமுதல் செய்வதும், அவர்களுடைய கைப்பேசிகளை வாங்கி வைத்துக் கொள்ளுவதும் அவர்கள்  வெளியே தொடர்பு கொள்ள முடியாதபடி செய்வதும் - இது என்ன நாடா அல்லது காடா?  காட்டாட்சியா இங்கு நடக்கிறது?

அது சரி  இது போன்ற திருடர்களுக்கு என்ன தண்டனைக் கொடுக்கப்படுகிறது?  தெரியவில்லை! நமக்குத் தெரிந்தவரை அவர்கள் கொஞ்ச நாள்களில் வெளியே வந்துவிடுவார்கள்!  அதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இல்லாவிட்டால் இது போன்ற  'தொழில்கள்' எப்படி வளர்ந்து கொண்டே போகும்?

இது போன்ற நபர்களுக்குக் கடும் தண்டனைக் கொடுத்தால் ஒழிய இந்த கொத்தடிமை சம்பவங்கள்  தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். கொத்தடிமை என்பது காட்டில் மட்டும் அல்ல நாட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.  உணவகங்களில் நடப்பது என்ன அதுவும் கொத்தடிமை தான்!

குறைந்தபட்சம் இந்தத்  தவறுகளைச்  செய்பவர்களுக்குப் பத்து ஆண்டுகளாவது சிறைத் தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும். சிங்கப்பூரைப் போன்று கடும் தண்டனை தான் இதற்கான தீர்வாக இருக்க முடியும். 

இவர்களுக்குச் சரியான தண்டனை இல்லாததால் தான் இவர்களுடைய தொழிலும் வளர்ந்து கொண்டு இருக்கிறது! அதற்கு அரசாங்க ஆதரவு இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது!

அரசாங்கம் தான் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இன்னும் இது போன்று கயவர்களால் சீரழிந்து கொண்டிருக்கும் கொத்தடிமைகளுக்காக  இறைவனை வேண்டுவோம்>

No comments:

Post a Comment