என்ன செய்வது? ஒரு சில செய்திகளைப் படிக்கும் போது நமக்கு வருத்தம் வருவதை தடுக்க முடிவதில்லை.
அப்படித் தான் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. சுப்பர மைண்டடின் தன்முனைப்புப் பேச்சாளரும், ஆசிரியருமான மு.கணேசன் இந்தச் செய்தியை விடுத்துள்ளார்.
ஆமாம், சிலாங்கூர் மாநில நூலகங்களில் 14,500 தமிழ்ப் புத்தகங்கள் இருக்கின்றன. என்ன புண்ணியம்? படிக்கத்தான் ஆளில்லை என்கிறார். அதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஒரு காலக் கட்டத்தில் நான் நூலகம் சென்று புத்தகங்களைப் படித்ததுண்டு. அப்போதெல்லாம் தமிழ்ப் புத்தகங்களை நூலகங்களில் பார்க்க முடியாது. அதனால் பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்களைத் தான் படிக்க முடிந்தது. இப்போதும் கூட தமிழ்ப் புத்தகங்கள் இருக்கும் என நான் நம்பவில்லை. காரணம் ஆசிரியர் கணேசன் சிலாங்கூர் மாநிலத்தைப் பற்றித்தான் பேசுகிறார். மற்ற மாநில நூலகங்களில் ஏதோ ஓரிரு புத்தகங்களை வைத்திருப்பார்கள். அதையும் யாரும் படிக்கப் போவதில்லை. இது தான் இன்றைய நிலை!
நம்மிடையே நிறைய இயக்கங்கள் இருக்கின்றன. மலேசிய அளவில் ஒரு மாபெரும் இயக்கம் என்றால் அது தமிழ் இளைஞர் மணி மன்றம் தான். அதனை அடுத்து மிகவும் சக்தி வாய்ந்த இயக்கம் என்றால் அது திராவிடர் கழகம். இவர்கள் கொஞ்சம் முயற்சி எடுத்து தனது அங்கத்தினர்கள் படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நானும் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ளுகிறேன். நமது இளைஞர்களை நாம் தான் ஊக்குவிக்க வேண்டும்.
பொதுவாக படிக்கின்ற பழக்கம் குறைந்து விட்டது என்பதாக நாம் சொல்லுகிறோம். ஆனால் சீனர்களிடையே படிக்கின்ற பழக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை. அதே போல மலாய்க்காரர்களிடையேயும் படிக்கின்ற தாகம் இன்னும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. படிக்கின்ற சமுதாயம் தான் முன்னேறும் என்பதே நமக்குத் தெரியவில்லை.
இப்போதைய இளைய தலைமுறை கையில் ஒரு கைப்பேசி இருந்தால் போதும் என்னும் மன நிலைக்கு வந்து விட்டது. அத்தோடு இணையத்தளத்தில் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்
ஆனாலும் அரசாங்கம் கொடுத்திருக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுவது தான் புத்திசாலித் தனம். நாம் அவைகளை ஒதுக்க விட முடியாது. நாம் ஒதுக்கினால் அரசாங்கம் நம்மை ஒதுக்கிவிடும்! இன்றைய நிலையில் நமக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புக்களைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
கொடுக்கும் போது ஒதுங்கிக் கொள்ளுவதும் கொடுக்காத போது அதற்காகப் போராடுவதும் நமது குணம்! இது எங்கே போய் முடியும்?
No comments:
Post a Comment