Wednesday 10 July 2019

என்ன தான் முடிவு?

நமக்கு ஒன்றும் புரியவில்லை.  பள்ளி சிறுவரிடையே சிறு சிறு மனக்கசுப்புகள் வரலாம். சிறு சிறு சண்டைகள் வரலாம்.  நாமெல்லாம் அதைக் கடந்து தான் வந்திருக்கிறோம். ஆனால் அவைகள் எல்லாம் ஒரு சில நாள்கள் தான் நீடிக்கும்.  அப்புறம் நாம் எல்லாம் சகஜ நிலைக்கு வந்து விடுவோம். இது தானே இயற்கை?

ஆனால் நம்மால் ஜீரணிக்க முடியாத செய்தி இது. அதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. மாணவர்களிடையே ஏற்பட்ட ஒரு சிறிய தகராறகத்தான் இருக்க முடியும். ஒரு சிறிய மோதல். பல பள்ளிகளில் இது போன்ற மோதல்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.   அடிதடியும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்திய மாணவரிடையே கட்டொழுங்குப் பிரச்சனை அதிகம் என்பதாகத்தான் பார்த்துக் கொண்டும், கேள்விப்பட்டுக் கொண்டும் இருக்கிறோம்.

இந்தக் கொலைச் சம்பவம் நம்மை அதிர வைக்கிறது. இப்போது யாரை நாம் குற்றம் சாட்டப் போகிறோம்?  14 வயது,  15 வயது, 16 வயது -  என்பதெல்லாம் ஒரு வயதா? இது படிக்க வேண்டிய வயது என்று தானே நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.  ஆனால்  இது கொலை செய்கின்ற வயது என்பதைக்  காட்டி விட்டனரே  நமது  செல்வங்கள்.

ஒன்று நாம் பெற்றோரைக் குறைச் சொல்லுகிறோம்.  இல்லையென்றால் பள்ளி ஆசிரியரைக் குறைச் சொல்லுகிறோம். 

நமக்குத் தெரிந்தவரை  முதல் பொறுப்பு பெற்றோர்கள் தான். அதன் பின்னர் தான் பள்ளி ஆசிரியர்.முதலில் வீட்டில் பெற்றோரிடம் கட்டொழுங்கு  இல்லை!  அது தேவை இல்லை என்று நினைக்க வேண்டாம்.  இருபத்து நான்கு  மணி நேரமும்  தொலைக்காட்சிகளின் முன்னால் உட்கார்ந்து கொண்டு  படம் பார்த்துக் கொண்டு இருந்தால் பிள்ளைகள் எப்படி  இருப்பார்கள்?  படம் பார்ப்பதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று கேட்கலாம்.  எல்லாமே  பெரிய விஷயம் தான். அந்தச் சினிமா படங்கள்  நீங்கள்  வாழ வேண்டும் என்றா சொல்லிக் கொடுக்கின்றன?  நீங்கள் எப்படி  ஒருவரை ஒருவர்  அடித்துக் கொண்டு  சாக வேண்டும்  என்று தானே  சொல்லிக் கொடுக்கின்றன! அதைத்தானே இப்போது நாம் செய்து  கொண்டிருக்கிறோம்!

சினிமாவில் வருகின்ற  வன்முறைகள் நமது  பிள்ளைகளை  மிகவும் பாதிக்கின்றன என்பது இந்த ஒரு கொலைச் சம்பவத்தை வைத்தே மதிப்பிடலாம். இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும்  மாணவர்கள். பதினான்கு வயது தங்கை தனது பதினைந்து வயது காதலனுடன் சேர்ந்து அவளுடைய பதினாறு வயது அண்ணனைக் கொலை செய்திருப்பது என்பது நாம் கேள்விப்படாத ஒன்று.  தங்கை தனது அண்ணனின் கழுத்தை அறுத்து கொலைச் செய்திருக்கிறாள் என்று சொல்லப்படுகிறது. இந்த அளவு  கொடூரக் கொலைக்குக் காரணம் என்னவாக இருக்கும்?

இதற்கான தீர்வு என்ன என்பது தான் நம் முன் நிற்கும் கேள்வி? என்ன தான் முடிவு?  பார்ப்போம்!

No comments:

Post a Comment