Tuesday 23 July 2019

சோம்பேறித்தனமா. .....!

இது நாள் வரை இப்படி யாரும் சொன்னதில்லை. அதுவும் காவல்துறையைப் பற்றி இப்படியெல்லாம் சொல்ல முடியுமா என்பது கூட நமக்குத் தெரியாது! 

ஆனால் நமது புதிய ஐ.ஜி.பி. டான்ஸ்ரீ அப்துல் ஹமீட் பாடோர்  இப்படி ஒரு குற்றச்சாட்டை நமது காவல்துறையினர் மீது வைத்திருக்கிறார்!

ஆமாம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பல புகார்கள் இன்னும் விசாரணைக்கு வராமலிருக்கக் காரணமே புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தாம் என்பதாக அவர் கூறியிருக்கிறார். 

பட்டுக்கோட்டையாரின் பாடல் ஒன்று ஞாபத்திற்கு வருகிறது:

            நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
            பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக் கதவும் 
            சக்தி இருந்தால் உன்னைக் கண்டு சிரிக்கும் 
            சத்திரம் தான் உனக்கு இடம் கொடுக்கும் 

இந்தப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த சோம்பேறி அதிகாரிகளால் தான் இத்தனை ஆண்டுகள் எந்த ஒரு முடிவும் இல்லாமல் விசாரணைக்கு வராமல் பல வழக்குகள் கிடப்பில் கிடப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

நமக்கு ஒன்று புரியவில்லை.   அவர்கள் தாங்கிய உடையும் ஆயுதமும் அவர்களை எப்படி சோம்பேறித் தனத்தைக் கொண்டு வர முடியும்?  அவர்கள் தாங்குகின்ற உடைகள் சோம்பேறித்தனத்திற்கு அடையாளமோ! இவர்களால் எப்படி தூங்க முடியும்?  நாட்டைக் காக்க  வேண்டியவர்கள் நாட்டை அழிப்பதற்கு அல்லவா போட்டிப் போடுகிறார்கள்!

இவர்கள் செய்கின்ற வேலையைப் பார்க்கின்ற போது இவர்கள் என்ன சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கிறார்களோ என்றல்லவா எண்ணத் தோன்றுகிறது!  அரசாங்கத்தின் அத்தனை சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு அவர்கள் சோம்பேறிகளாக இருந்தால்  நாம் எங்கே போய் முட்டிக் கொள்ளுவது? 

எது எப்படி இருந்தாலும் அவை கடந்துபோன சம்பவங்கள்.  தலைமை சரியாக இல்லாவிட்டால் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை "தூங்காதே தம்பி தூங்காதே!" என்று தான் நாம் பாட வேண்டி வரும். இப்போது காவல்துறை சரியான தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கிறது. காவல்துறை மட்டும் அல்ல மற்ற துறைகளிலும்  முன்னாள் சோம்பேறிகள் எல்லாம்  அப்புறப்படுத்தப் படுகின்றனர் என்பது நல்ல செய்தி.

சோம்பேறித்தனம்  வீட்டுக்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல.  அது ஒரு குடும்பத்தையும் கவிழ்த்துவிடும் அதே போல நாட்டையும் கவிழ்த்துவிடும்!  இன்று நமது அரசாங்க ஊழியர்களைப் பற்றி நமக்கு நல்ல  அபிப்பிராயம் இல்லை  என்றால் அந்த அபிப்பிராயம் சோமபேறிகளால்  ஏற்படுத்தப்படுகிறது  என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

ஐ.ஜி.பி. சொன்னது போல  சோம்பேறி அதிகாரிகளால்  பல வழக்குகள் நிலுவையில் நிற்கின்றன. தூசி துடைத்து அவைகள் உயிர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த நேரத்தில் ஐ.ஜி.பி. க்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.  எல்லாக் காலங்களிலும்  ஏதோ ஒரு வகையில்  சோம்பேறிகளால் நாம் வழி நடத்தப்படுகின்றோம். நாமும் சோம்பேறி  கூட்டமாக மாறி விடுகிறோம். அந்த நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும்!      

சோம்பேறி என்னும் பெயர் வாங்காதே!                                                                                                                                                                                     

No comments:

Post a Comment