Saturday 27 July 2019

சபாஷ் இங்காட்!

சபாஷ் இங்காட்!   உங்களின் ஙுறுதிப்பாட்டை வரவேற்கிறேன்!

இந்திராகாந்தியின்  இளைய மகள் பிரசன்னா டிக்சாவை தேடும் முயற்சியில் இறங்கியிருக்கும் இங்காட் என்னும் அரசு சாரா இயக்கம் தான் கண்ட/கேட்ட/சொன்ன விஷயங்களில் உண்மை இருப்பதாக நம்புகிறது. அதனால் அந்த இயக்கம் யார் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லவும் தயாராய் இருக்கிறது.

டிக்சாவை தேடும் முயற்சியில் இறங்கியிருக்கும் அந்த இயக்கம் இதுவரை கண்டு பிடித்திருக்கும் உண்மைகள் தான் என்ன?

பாஸ் கட்சியின் ஆதரவு பெற்ற அரசு சாரா இயக்கம்,  இந்திய மத போதகர் ஜாகிர் நாயக்கின் ஆதரவு இயக்கம், தென் தாய்லாந்து பிரிவினை வாத இயக்கம் - இவர்களின் ஆதரவோடு இந்திரா காந்தியின் குழந்தை மறைத்து வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதாக இங்காட் இயக்கம் கண்டு பிடித்திருக்கிறது. - அத்தோடு அந்தக் குழந்தை, கிளந்தான் மாநிலத்தில்,  பதிவு பெறாத சமயப்பள்ளி ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறாள் என்பதாகவும் அந்த இயக்கம் கண்டு பிடித்திருக்கிறது. 

காவல்துறை  இந்நாள் வரை கண்டு பிடிக்காத, தங்களால் முடியவே முடியாத, ஒரு சில புதிய தகவல்களை இங்காட் இயக்கம் கண்டு பிடித்திருக்கிறது என்பதை அறியும் போது அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பாஸ் கட்சியின் ஆதரவு பெற்ற அரசு சாரா இயக்கம் ஒன்றும் இந்த "மறைத்தல்"  சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகக்  கூறப்படுவதை  பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான்  மறுத்திருக்கிறார்.  மேலும் இந்த குற்றச்சாட்டுக்காக இங்காட் இயக்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதாகவும் அவர் கூறியிருந்தார். 

ஆனால் இங்காட் இயக்கத்தின் தலைவர் அருண் துரைசாமி  தங்களுடைய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையே என்று கூறி  துவான் இப்ராகிம் தங்களது அரசு சாரா இயக்கங்களை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.  "மன்னிப்பு தேவை இல்லை. எங்களுடைய ஆதாராங்களைப் பாருங்கள்" என்பதாக அருண் துரைசாமி கூறியிருக்கிறார்.  

நாம் சொல்ல வேண்டியதெல்லாம் ஒன்று தான். இங்காட் இயக்கம் உண்மை பேசுவதாகவே நாங்கள் நம்புகிறோம். பொய் சொல்லுவதற்கான வாய்ப்பு இல்லை. அதனால் அவர்கள் கூற்றில் உண்மை இருப்பதால் மன்னிப்பு என்பதெல்லாம் கூடவே கூடாது. 

மேலும் துவான் இப்ராகிம் பாஸ் ஆதரவு பெற்ற அரசு சாரா இயக்கங்களை ஆராய வேண்டும்.   எப்படிப் பார்த்தாலும் அவருக்குத் தெரியாமல் இருக்க வழியில்லை!   ஆனால் இந்த வயதில்,  பக்தி பழமான அவர்,  பொய் சொல்லுவரா என்பதும் தெரியவில்லை!

சபாஷ் இங்காட்! உங்களைப் பாராட்டுகிறோம்!

No comments:

Post a Comment