Tuesday 29 September 2020

ஜ.செ.க. சீனர்கள் கட்சியா?

 ஜனநாயக செயல் கட்சி சீனர்கள் கட்சி என்கிற ஒரு குற்றச்சாட்டு எப்போதுமே நமது மலேசிய அரசியலிலே உள்ள ஒரு குற்றச்சாட்டு!

தேர்தல் காலங்களிலே இது பற்றியான பேச்சு கொஞ்சம் அதிகப்படியாகவே நமது காதில் விழும்! 

ஆனால் அதனை எப்படி நாம் பார்க்கிறோம்?  உண்மையைச் சொன்னால் அது ஒரு சீனர்கள் கட்சி என்பதாகத்தான் நாமும் பார்க்கிறோம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

காரணம் பெரும்பாலான அதன் ஆதரவு என்பது பட்டணப்புறங்களிலிருந்து தான் வருகிறது என்பது ஒன்றே போதும் நாம் அப்படி குறிப்பிடுவதற்கு! நாம் அப்படி சொன்னாலும்  இந்தியர்களைப் பொருத்தவரை நமது இனத்தவர்கள் பலர் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அக்கட்சியைப் பிரதநிதிக்கின்றனர் என்பது நல்ல விஷயம் தான். அவர்களில் பலர் சீனர்களின் ஆதரவோடு தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதற்கும் ஒரு காரணம் உண்டு என நான் நினைக்கிறேன். ஜ.செ.க. என்பது இத்தனை ஆண்டுகளாக ஓர் எதிர்கட்சியாகவே செயல்பட்டு வந்திருக்கிறது. பல இடங்களில் அக்கட்சி மாநில அளவில் அவர்களின் கிளைகளை வழிநடத்த சீனர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அதனால் அவர்களுக்கு இலாபமில்லை.  இந்த நேரத்தில் தான் அவர்களின் இடங்களை நிரப்புவதற்கு இந்தியர்கள் உள்ளே புகுந்தார்கள்! அவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கள் கிடைத்தன!

சென்ற பொதுத் தேர்தலில் பக்காத்தான் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அதனால் ஜ.செ.க. வின் செல்வாக்கும் உயர்ந்தது என்பதும் உண்மை! ஆனால் எதிர்பாராத விதத்தில் அந்த அரசாங்கம் கவிழ்ந்தது!  அதனை மீண்டும் - பக்காத்தான் ஆட்சியைக் கொண்டுவர - டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் களத்தில் இறங்கியுள்ளார். அவர் வெற்றிபெறுவார் என நம்புவோம்.

அரசாங்கத்தில் பங்குப் பெறக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தால் வருங்காலங்களில் ஜ.செ.க. செல்வாக்கு உயரும். அதே சமயத்தில் இந்தியர்களைப் புறக்கணிக்கும் போக்கும் ஆரம்பமாகும்! 

இப்போதே நாம் ஒரு சில விரும்பத்தகாத விஷயங்களைப் பார்க்கிறோம். சீன மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் தமிழுக்குக் கொடுப்பதில்லை!  அதனை அவர்கள் சரி செய்வார்கள் என நம்புவோம். 

இப்போதைக்கு நாம் ஜ.செ.க. வை சீனர்களைச் சார்ந்த கட்சி என்று சொன்னாலும் அது மலேசியர்கள் கட்சி என்கிற அடையாளமே நிலைத்து நிற்கும்.

அந்த நிலை விரைவில் வரும் என நம்புவோம்!

No comments:

Post a Comment