Saturday 22 January 2022

வழியா இல்லை பூமியில்!

 

                    Freddie Beckitt stands in line for rich people and earns 160 pounds per Day!

கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது: "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்!"

அந்தப் பாடலுக்கு மிகவும் பொருத்தமானவர் மேலே புகைப்படத்தில் உள்ள Freddie Beckitt என்னும், லண்டனைச் சேர்ந்த  31 வயது இளைஞர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். அவரது வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பணக்காரர்கள். அவர்களுக்குப் பணம் என்பது ஒரு பொருட்டல்ல!  ஆனால் அவர்களுக்கு வரிசையில் வந்து நிற்பதற்குப் பொறுமை இல்லை!  அதனால் சும்மா காசை தூக்கி வீசிவிட்டுப் போய் விடுவார்கள்!  ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அவர் 20 பவுன்களைக் கட்டணமாக வசூலிக்கின்றார்.

ஆனால் இவர் செய்கின்ற இந்த வேலையை எளிதான ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதிலும் பல சிரமங்கள் உண்டு. ஒரு சில நிகழ்வுகளுக்குப் பல மணி நேரங்கள் காத்திருக்க நேரும். சமயங்களில் அவர்களுக்காக காத்திருந்து டிக்கெட்டுகளும் வாங்க வேண்டி வரும். கடும் குளிரில் நின்று கொண்டு அந்த குளிரோடு போராட வேண்டும்! இது போன்ற சிரமங்களை எதிர் நோக்கினாலும்  "நான் செய்கின்ற இந்த வேலையில் எந்த கஷ்டமும் இல்லை! நின்று கொண்டு இருப்பதில் என்ன கஷ்டம்?" என்கிறார் பிரெடி.  "அதனால் ஒரு மணி நேரத்திற்கு 20 பவுனுக்கு  மேல் என்னால் ஏற்ற முடியாது!"

உண்மையில் பிரடிக்கு இது முழு நேர தொழில் இல்லை. அவர் சரித்திரக் கதைகள் எழுதும் வளரும் எழுத்தாளர். இந்த "வரிசையில் நிற்கும்" தொழிலில் அவருக்குப் பணம் கிடைக்கிறது.  கதைகள் எழுத வசதியாகவும் வாய்ப்பாகவும் இருக்கிறது.  பசியைப் போக்கினால் தானே எழுத வரும்? அதை அவர் சரியாகவே செய்கிறார்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது:  பிரடி தனக்கு என்று ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய எழுத்தாளர் கனவையும் விட்டுக் கொடுக்கவில்லை. "காத்திருக்கும்" அவர் செய்யும் வேலை அவருக்குப் பிடித்திருக்கிறது. பணம் கிடைக்கிறது அது போதுமே! வேலையில் எந்த கஷ்டமும் இல்லை! 

எல்லாமே ஏதோ ஒரு பொறியில் இருந்து தான் இப்படி ஒரு வேலையை அவர் அமைத்துக் கொண்டார்.  மற்றவர்களுக்கும் அவர் உதவ வேண்டும், அவரும் பிழைக்க வேண்டும், தனது எழுத்தாளர் கனவும் நிறைவேற வேண்டும்.

இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைத்துவிட்டால் எதுவும் குறுக்கே நிற்காது! இதைத்தான் தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்றும் திறமை.

வாழ நினைத்தால் வாழலாம்! வழியா இல்லை பூமியில்!

No comments:

Post a Comment