Saturday 1 January 2022

வருக! வருக!

 


புதிய ஆண்டு பிறந்துவிட்டது! சென்ற ஆண்டில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தோமோ அதனையெல்லாம் சாதித்தோமா என்கிற கேள்வி எழத்தான் செய்யும்.

சாதிக்கவில்லை என்று சொன்னாலும் யாரும் கோபித்துக் கொள்ள வழியில்லை! காரணம் சென்ற ஆண்டு முழுவதுமாக கோரோனா தொற்றின்  கட்டுப்பாட்டில் உலகமே கட்டுண்டிருந்தது. நமது நாடும் அதற்கு விதிவிலக்கல்ல.

சென்ற ஆண்டு முழுவதுமே ஊசி, தடூப்பூசி, மூன்றாவது பூஸ்டர் ஊசி என்று கோவிட்-19 பற்றியே பேச வேண்டிய சூழலிலிருந்து  விலகிப் போக முடியவில்லை. வேலை இல்லாப் பிரச்சனை, வேலை இருந்தாலும் அலுவலக செல்ல முடியாது பிரச்சனை,  தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குச் சம்பளம் இல்லாத பிரச்சனை- அதென்ன ஒன்றா இரண்டா? தொழிற்சாலைகள் தொழிலாளர்களை அம்போவென்று நடுத்தெருவில் விட்டுவிட்டு ஓடிப் போனார்கள்! உணவு இல்லாத குடும்பங்கள், பள்ளிக்குச் செல்ல முடியாத பிள்ளைகள் - இப்படிப் பல!பல! பல!

இப்படி ஒரு காலக் கட்டத்தை இந்த நாடு சந்தித்ததில்லை. ஏன்? இந்த உலகமே சந்தித்ததில்லை.

இந்த சூழலில் என்ன தான் தீர்மானங்களை நிறைவேற்ற ஆசைகள் இருந்தாலும் எதனையும் நிறைவேற்ற முடியாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.

ஆனால் இது பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நல்ல காலத்திலேயே நாம் அப்படி ஒன்றும் புத்தாண்டு அன்று  எடுத்த எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றியதாக  நமக்கு நினவில்லை! எல்லாம் ஆசை தான்!  செயல் இல்லாத ஆசைகள் எல்லாம் கிணற்றில் போட்ட கல் தான்!

புத்தாண்டை வரவேற்கிறோம்! ஏதோ தீர்மானம் செய்தே ஆக  வேண்டுமென்றால் ஒரே ஒரு தீர்மானத்தை வைத்துக் கொண்டு அதனை நிறைவேற்ற முயற்சி செய்வோம்! ஆண்டுக்கு ஒன்று போதும்!  அதனை நிறைவேற்றினால் போதும்!

புத்தாண்டே வருக! வருக!

No comments:

Post a Comment