Saturday 1 January 2022

மலேசிய அரசியலில் பெயர் போடுவாரா?

                                        Y.B. Syed Saddique Syed Abdul Rahman
 முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரான சையத் சாடிக் மிக இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்தவர் சென்ற தேர்தலில் மூவார் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெர்ந்தெடுக்கப்பட்டு  நேரடியாக அமைச்சரானவர்.

தான் சார்ந்திருந்த கூட்டணியிலிருந்து விலகி  இப்போது அவரே தனி கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.  MUDA (Malaysian United Democratic Alliance)  என்கிற அரசியல் கட்சிக்கு அவர் தலைவர்.

வருங்கால அரசியலில் மூடா கட்சியின் நிலை என்னவாக இருக்கும் என்பதைக் கொஞ்சம் அலசுவோம். பொதுவாக சையத் சாடிக் மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. அரசியல் வானில் வருங்கால மின்னும் நட்சத்திரம். மக்களை ஈர்க்கும் சக்தி அவருக்கு உண்டு.  இளைஞர்கள் தான் அவரின் பலம். அவரும் அவர்களைத்தான் மிகவும் நம்புகிறார்.

வெற்றி பெறுவதற்கான கூடுதல் அம்சங்கள் அவரிடம் இருந்தாலும் எங்கோ ஏதோ சரியாக இல்லை! பி.கே.ஆர். தலைவர்  அன்வார் இப்ராகிம் அரசியலுக்கு நேரடியாக வந்தவர் இல்லை. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அவர் நாடறிந்த தீவிர இஸ்லாமியப் பேச்சாளர்.  மலாய் இளைஞர்களிடையே மிகவும் பிரபலம். பொதுவாக  அவர் நல்ல மனிதர் என்கிற பெயர் எடுத்தவர்,

அன்வார் இப்ராகிமோடு இவரை ஒப்பிடும் போது  இவருக்கு எந்த ஒரு பின்னணியும் இல்லை. சென்ற தேர்தலுக்குப் பின்னர் தான் இவர் அனைவருக்கும் தெரிந்தவராக அதுவும் அமைச்சராக வந்த பின்னர் தான் நாலு பேருக்கு தெரிந்தவராக இவர் அறிமுகமாகிறார்.

இந்த நோக்கில் பார்க்கும் போது அரசியலுக்கு இவர் புதியவர். தன்னை நிருபித்துக் கொள்ள அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஒரு வேளை பக்காத்தான் அரசாங்கம் தொடர்ந்திருந்தால் இவருடைய திறமை நமக்குப் புரிந்திருக்கும்.

மேலும் இன்றைய அரசியல் என்பது நேர்மையற்ற அரசியல்.  நேர்மையற்றவர்கள் தான் அரசியல் பண்ண முடியும் என்கிற போக்கு இப்போது உண்டு. தேர்தல் நேரத்தில் பணத்தைக் கொட்டுபவர்கள் தான் வெற்றி பெற முடியும் என்னும் போக்கு ஆளுந்தரப்பினருக்கு உண்டு.

இன்றைய நிலையில் அரசியலில் காலூன்ற இப்போது உள்ள பிரபல கட்சிகளுடன் தான் கூட்டணி சேர வேண்டும். அதுவும் அரசியலில் வலுவான கட்சிகள்! இன்னும்  தேர்தல் காலம் வரவில்லை என்பதால் இப்போது எதையும் கணிக்க முடியாது என்பது தான் உண்மை.

ஆனாலும் "மூடா" கட்சி மூடி தான் இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். அது எந்தக் காலத்திலும் திறக்கப் போவதில்லை. தேர்தலில் போட்டியிட அவருக்கு இளைஞர்கள் கிடைப்பார்கள். வெற்றி பெற இளைஞர்கள் கிடைப்பார்களா என்பது புரியாத புதிர்!

ஒரு வேளை அவருடைய மூவார் தொகுதியில்  அவர் மிண்டும் வெற்றி பெறலாம். சாத்தியம் உண்டு.  ஆனால் மற்ற தொகுதிகளில் வெற்றி வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை!

அவர் வெறும் வாக்குகளைப் பிரிக்கும் சக்தியாகத் தான் இருப்பார்!

No comments:

Post a Comment