Saturday 29 January 2022

நீங்களும் கொஞ்சம் வாய் திறங்களேன்!

 

                                              Inter-Religious Dialogue Convention

பொதுவாகவே மலேசியர்களாகிய நமக்கு இலஞ்சம், ஊழல் என்பதெல்லாம் மிகவும் சர்வ சாதாரண விஷயமாகப் போய்விட்டது! பணத்தைக் கொடுத்து எதனையும் சாதிக்க முடியும் என்கிற நிலைமையில் தான்  நாடு போய்க்கொண்டிருக்கிறது!

இலஞ்சம், ஊழல் என்பது பற்றி யார் தான் வாய் திறக்க முடியும்? எதிர்க்கட்சிக்காரன் இலஞ்சம் ஊழல் பற்றி பேசினால் அதைப் பற்றி  யாரும் கவலைப்படுவதில்லை. காரணம் இவன் பதவிக்கு வந்தால் இவனும்  அதையே தான் செய்யப் போகிறான். ஒருவன் அரசியல்வாதியாக  இருக்கும்வரை  அவனிடம் நேர்மையை எதிர்பார்ப்பது இயலாத காரியம். அப்படி இருந்தால் அவன் மனிதன் அல்லன் அவன் மகான்!

அதற்காக பொது மக்களும், மக்களிடையே ஒரு கௌரவமான இடத்தைப் பெற்றிருக்கும் சமயவாதிகளும் வாய் திறவாமல் இருந்தால் என்ன பொருள்?  மக்கள் பேசினால் அதனை அரசாங்கம் சட்டைச் செய்யப் போவதில்லை.  அதனையே சமய்வாதிகள் பேசினால் அவர்களின் வார்த்தைக்கு  மதிப்பும் மரியாதையும் உண்டு.

சமயவாதிகளின் குரலுக்குக் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை அரசியல்வாதிகள் வேண்டா வெறுப்பாகவாவது அவர்களின் ஆலோசனைகளுக்கு அடிபணிவார்கள். 

ஆனால் இப்போது சமயவாதிகளையும்  சந்தேகக் கண்கொண்டு தான் பார்க்க வேண்டியுள்ளது. இவர்கள் வாய் திறக்காமல் இருப்பதைப் பார்க்கும் போது இவர்களுக்கும் அரசியல்வாதிகளிடம் ஏதும் தொடர்பு இருக்குமோ என்று யோசிக்க வேண்டியுள்ளது!

சமீபத்தில் கூட கோயில் உண்டியில் திருடினான் என்பதற்காக ஓர் இளைஞனை குளிப்பாட்டி, பாடைகட்டி அவனை வெளியே அனுப்பிவைத்தார்கள்!  இது சிறிய உண்டியல் திருட்டு. ஆனால் கோடிக்கணக்கில் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளைப் பற்றி  இவர்கள் வாயே திறப்பதில்லை!

எனக்குத் தெரிந்து எந்த ஒரு சமயவாதியும் அரசியல்வாதிகள் செய்கின்ற ஊழல்களைச் சுட்டிக்காட்டிப் பேசுவதில்லை! ஊழல் என்பதையும்  புனிதம் என்பதையும் ஒரே திராசில் வைத்துப் பார்ப்பது ஏன் என்று புரியவில்லை! இப்போது சமயவாதிகளையும் அரசியல்வாதிகளையும்  ஒரே திராசில் வைத்துப் பார்க்க வேண்டிய காலக்கட்டம் இது என்றே தோன்றுகிறது!

ஊழல், இலஞ்சம் என்பது பற்றி சமயவாதிகள் பேச வேண்டும். எது பற்றியும் பயப்படாத அரசியல்வாதி குறைந்தபட்சம் சொர்க்கம் நரகம் என்பது பற்றியாவது பயப்படுவான்! அவனை  "நரகம்! நரகம்1' என்று சொல்லியே பயமுறுத்தியே கொல்ல வேண்டும்!

இன்றைய நிலையில் சமயவாதிகள் வாய் திறக்க வேண்டும். நாட்டு நலன் முக்கியமே தவிர அரசியல்வாதிகளின் நலனல்ல! இதனை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்!

அனைத்து மதத்தையும் சேர்ந்த சமயவாதிகள் இலஞ்சம் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். பார்த்தும் பார்க்காமல் இருப்பதும், கேட்டும் கேளாமல் இருப்பதும் ஒருவகை ஊழல் தான்! இதற்கும் இறைவனின் தண்டனை உண்டு!

No comments:

Post a Comment