Thursday 13 January 2022

ஏற்றுக்கொள்வதாக இல்லை!

மனிதவள அமைச்சர், டத்தோஸ்ரீ சரவணன் அவர்களின் விளக்கம் ஏற்றுக் கொள்வதாக இல்லை!

அப்படிச் சொல்வதால் மன்னிக்க வேண்டும். உங்களை நாங்கள் நம்புகிறோம்.  ஆனால் அரசாங்கம் என்று வரும் போது நாங்கள் உங்களை நம்பவில்லை. அரசாங்கம் சொல்லுவதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். அது உங்கள் கடமை. மக்கள் நலன் என்பதைவிட அரசாங்க நலன் தான் முக்கியம் என்பது தான் தானைத் தலைவர் உங்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடம்!

ஆலயங்கள் குறித்த தரவுகள் மனிதவள அமைச்சிற்கு எதற்குத் தேவைப்படுகிறது?  உங்களுக்கே தெரியும், நீங்களே சொல்லிவிட்டீர்கள். உங்களுக்குத் தேவையான தரவுகள் அனைத்தும் சங்கங்களின் பதிவகத்தில் கிடைக்கும் என்பதாக! இரகசியம் ஒன்றுமில்லையே! தேவஸ்தானத்தின் நிலையும் அதே நிலை தான்.  தேவஸ்தானத்தின் ஆலயங்களின் அனைத்துத் தரவுகளும் சட்டத்துறை தலைமையகத்தில் கிடைக்கும்.

ஆலயங்களின் அனைத்துத் தரவுகளும் அரசாங்கத்திடம் உள்ளன.  இப்போது மனிதவள அமைச்சுக்குத் தனியாக ஏன் தரவுகள் தேவை என்பது ஒன்றும் கேட்கக் கூடாத கேள்வி அல்ல.

நம்மிடம் உள்ல ஒரே பயம் நீங்கள் அங்கே இருப்பது தான் சந்தேகத்தை எழுப்புகிறது! செடிக், மித்ரா போன்ற - இந்தியர்களைப்  பொருளாதார ரீதியில் உயர்த்த வேண்டும் - என்கிற குறிக்கோளைக் கொண்ட அந்த நிதிகளின் இப்போதைய நிலை என்ன? இந்த நிதியின் மூலம் இந்தியர்களை உயர்த்தும் போதெல்லாம் கூட இருந்தவர்கள் யார்? நீங்கள் தானே! ம.இ.கா. தானே! 

ஆக, நீங்கள் கூட இருந்தால் ம.இ.கா. கூட இருக்கும்!  இந்தியர்களின் பொருளாதாரத்தை எப்படி உயர்த்தினீர்களோ அப்படித்தான் இந்த ஆலயத் தரவுகள் பற்றியும் நினைக்க வேண்டியுள்லது. ஏதோ சதி என்று தான் இயற்கையாகவே நமக்குத் தோன்றுகிறது!  இது பழக்க தோஷம் தான்! வேறு விதமாக நினைக்கத் தோன்றவில்லையே!

கெடா மாநிலத்தில் கோயில்களை உடைத்தார்கள். தைப்பூச விடுமுறையை நிறுத்தினார்கள். அந்த அரசாங்கத்தில் உங்கள் பங்கு இல்லை என்று சொல்ல முடியுமா? நீங்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என்பது எல்லாருக்கும் தெரியுமே!

ஒரு விஷயத்தை எங்களால் மறக்க முடியாது. நீங்கள் பங்கு பெற்றிருக்கும் அரசாங்கத்தில் பாஸ் கட்சியும் இடம் பெற்றிருக்கிறது. பாஸ் சொல்லுவதை அம்னோ கேட்கிறது.  நீங்கள் என்ன "நாங்கள் கேட்க மாட்டோம்!" என்று சொல்ல முடியுமா? பாஸ் கட்சியினர் தான் உங்களை மதிக்கவே இல்லையே! ஆனால் நாங்கள் உங்களை மதிக்க வேண்டும் என்கிறீர்கள். இது எப்படி சாத்தியமாகும்!

இந்து   ஆலயங்களைப் பற்றியான தரவுகள் மனிதவள அமைச்சுக்குத் தேவையற்றது என்று மீண்டும் மீண்டும் சொல்லுகிறோம். அங்கு வங்காள தேசிகள் வேலைக்குப் போகப் போவதில்லை! சம்பந்தா சம்பந்தமில்லாம பேசுவது, தரவுகளைக் கேட்பது பாஸ் அங்கம் பெற்றிருக்கும் அரசாங்கத்தில் நமக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது!

இல்லை டத்தோஸ்ரீ! ஏற்றுக்கொள்வதாக இல்லை! மன்னிக்கவும்!

No comments:

Post a Comment