Friday 7 January 2022

விலை ஏறுதுங்கோ!

 


இப்போது தான் சில தினங்களுக்கு முன் கோழி விலை, முட்டை விலை அனைத்தும் ஜனவரிக்குப் பின்னர் குறையும் என்று படித்ததாக ஞாபகம். அதற்குள் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. பெப்ரவரி 4-ம் தேதிக்குப் பின்னர் கோழி, முட்டை விலைகள் கூடும் என்று செய்திகள் வருகின்றன!

பாவம்! மக்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றனர்.  வீடுகளில் வெள்ளம் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டது. மக்கள் அனைத்தையும் இழந்து விட்டனர். வீட்டில் ஒரு சாமான் இல்லை. உட்காரக் கூட நாற்காலி, மேசை எதுவும் இல்லை. அலமாரிகள், மாற்றிக்கொள்ள துணிமணிகள் அனைத்தையும் வெள்ளம் கொண்டு போய் விட்டது.  அனைத்தும் சிதலம் அடைந்துவிட்டது.

யார் என்ன செய்ய முடியும்? போனது போனது தான்! அரசாங்கம் கொடுக்கிற ஆயிரம் வெள்ளி என்பதெல்லாம் போதாது என்பது அவர்களுக்கே தெரியும். ஏதோ அதையாவது கொடுக்கிறார்களே! கொடுக்கவில்லை என்றாலும் அவர்களை நம்மால் எதுவும் செய்து விட முடியாது!

அவர்களோ தங்களது ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ள எவ்வளவோ பணம் செலவு செய்து கொள்ள வேண்டியிருக்கிறது!  தகுதி இல்லாதவர்களுக்கெல்லாம் பதவி கொடுக்க வேண்டியிருக்கிறது. பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது! மக்களைப் பற்றி நினைக்க அவர்களுக்கு நேரமில்லை! காற்று இப்போது தான் அவர்கள் பக்கம் அடிக்கிறது! தூற்றிக்கொள்ள வேண்டியது அவர்களது கடமை! அது தான் அவர்களது புத்திசாலித்தனம்! அப்படித்தானே உலகம் சொல்லுகிறது!

ஆனால் இந்த நேரத்தில் விலைவாசி ஏற்றம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. நாட்டு மக்கள் பல சிக்கல்களில் சிக்கிக்கொண்டு உள்ளனர். கொரோனாவின் தொற்று குறைந்தபாடில்லை. குறையும் என்கிற சாத்தியமும் இல்லை.

மக்கள் இன்னும் முழுமையாக வேலையில் அமரவில்லை. இன்னும் பல தொழிற்சாலைகள் மூடியே கிடக்கின்றன. சிறு சிறு தொழில்களும் பல இன்னும் செயல்படவில்லை. எப்போதும் மிகவும் பரபரப்பாக இருந்த சிறு தொழில்கள்  இப்போது அவைகள் எங்கே போயின என்பதே தெரியவில்லை!

இந்த நேரத்தில் விலைவாசி உயர்வு என்பது மக்களை மிகவும் இக்கட்டான சூழலுக்குக் கொண்டு போகும். வாழ்வாதாரமே கேள்விக்கு உள்ளாகும் போது ஒவ்வொன்றும் உயர்ந்து கொண்டே போனால் எப்படி வாழ்வது? அரசாங்கம் மெத்தனமான போக்கைக் கடைப்பிடிக்காமல்  பிரச்சனைகளுக்கு முடிவு காண முயற்சி செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment