Friday 14 January 2022

இரட்டைப் போக்கு வேண்டாமே!


 இலஞ்ச ஊழல் சிறப்புக் குழுவின் தலைவர் டாக்டர் ரய்ஸ் யாத்திம் நல்லதொரு கருத்தை மனம் திறந்து கூறியிருக்கிறார். வரவேற்கிறோம்!

இலஞ்ச ஒழிப்புத்துறை இரட்டை வேடம் போடுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார்!

குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு சிலர் ஆரஞ்சு நிற லாக்கப் டி சட்டை  உடையுடன் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதும் இன்னும் ஒரு சிலர் ஏதோ அலுவலகத்திற்குச் செல்வது போல கோட் சூட்டுடன் ராஜநடையுடன் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதும் ஏன் இந்த வித்தியாசம் காட்டப்படுகிறது என்று கேள்வி எழுப்புகிறார் ரய்ஸ் யாத்திம்!

நமக்கும் அது சரியென தான் படுகிறது. இரு தரப்பினருமே குற்றவாளிகள் தான். அப்படியிருக்க ஏன் இந்த வேறுபாடுகள்? நமக்கும் அந்த கேள்வி உண்டு! எப்படியோ இலஞ்ச ஊழல் சிறப்புக் குழுவின் தலைவர் டாக்டர் ரயிஸ் யாத்திம் இந்தக் கேள்வியை எழுப்பிருக்கிறார். நாமும் அதனை ஆமோதிக்கிறோம். 

குற்றம் ஓரளவு நிருபிக்கப்பட்ட பின்னரே குற்றவாளிகள் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படுகின்றனர். சிறிய மீன்களை நீதிமனறத்திற்குக் கூட்டிக் கொண்டு வரும் போது அவர்களுக்கு லாக்கப் டீ சட்டைகள். அரசியல்வாதிகள், வசதிப்படைத்தவர்கள்,  பெரிய பதவிகளில் இருப்பவர்கள் - இவர்களை நீதிமன்றங்களுக்குக் கொண்டு வரும் போது கோட் சூட் போன்ற  உயர்தர ஆடைகள்!

இலஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு தரப்பினரையுமே குற்றவாளிகள் என்று தான் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருகின்றனர். டீ சட்டைகளுடன் வருபவர்களுக்குத் தண்டனை நிச்சயம் உண்டு என்றும் கோட் சூட்டோடு வருபவர்களுக்கு  நிச்சயம் இல்லை போன்ற ஒரு தோற்றத்தை இலஞ்ச ஊழல்  ஒழிப்புத்துறை  பொது மக்களுக்கு வெளிப்படுத்துகிறதோ என்று ஐயுற வேண்டியிருக்கிறது!

குற்றவாளிகள் என்றால் அவர்கள் குற்றவாளிகள் தான்!  வேறு மாற்றுக் கருத்துகள் இல்லை. இலஞ்ச ஒழிப்புத்துறை அவர்கள் கடமையை அவர்கள் செய்ய வேண்டும். அவர்கள் என்ன உடை அணிய வேண்டுமோ அதைத்தான் அவர்கள் அணிய வேண்டும். இரு தரப்பினருமே குற்றவாளிகள் தான். அவர்களைப் பிரித்து ஒருவன் பெரியவன் ஒருவன் தாழ்ந்தவன் என்கிற வேறுபாட்டை உருவாக்குவதே இலஞ்ச ஒழிப்புத்துறை தான்!

வருங்காலங்களில் இந்த உயர்ந்தவன் தாழ்ந்தவன் பிரச்சனை எழக்கூடாது என்பது எப்படி டாக்டர் ரைஸ் யாத்திம் அவர்களின் எண்ணங்களோ அதே எண்ணங்களைத்தான் பொது மக்களாகிய நாங்களும் கொண்டிருக்கிறோம்.

யாராக இருந்தால் என்ன?  இலஞ்சம், ஊழல் ஒழிய வேண்டும்! இப்படி இரண்டு விதமாக பிரித்து வைத்து பகமையை வளர்க்கக் கூடாது!

No comments:

Post a Comment