இன்று நாட்டில் பெரும்பான்மையினர் கொரோனா தடுப்பூசி போட்டவர்களாகவே இருக்கின்றனர்.
அந்த அளவில் நம் அரசாங்கத்தைப் பாராட்ட வேண்டும். வேகமாகவும், துரிதமாகவும் செயல்பட்டமைக்காக நன்றி சொல்ல வேண்டும். இன்று பலர் தடுப்பூசி போட்டவர்களாக இருப்பதால் ஓரளவு நிறுவனங்கள், தனியார் வர்த்தகங்கள் எல்லாம் இயங்க ஆரம்பித்திருக்கின்றன. பிள்ளைகளும் பள்ளிகளுக்குப் போக ஆரம்பித்திருக்கின்றனர்.
இரண்டு தடுப்பூசிகளும் போட்டுவிட்டவர்களுக்கு இப்போது மூன்றாவது பூஸ்டர் டோஸ் தேவையா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனாலும் சுகாதார அமைச்சை பொறுத்தவரையில் அது தேவை என்பதினால் அவர்களின் வேலையை அவர்கள் ஆரம்பித்துவிட்டனர். இன்று பலர் பூஸ்டர் டோஸையும் போட்டுக் கொண்டிருக்கின்றனர். சமீபத்திய செய்தியின் படி சுமார் 50 விழுக்காடு மக்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டு விட்டனர்.
ஆனாலும் ஒரு சிலர் இந்த பூஸ்டரைப் பற்றி பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். பூஸ்டர் டோஸ் போட்டவர்களில் பலர் இறந்திருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
இறந்திருக்கலாம். இல்லையென்று சொல்லிவிட முடியாது. ஆனால் இது தான் உலகெங்கிலும் நடைமுறையாக இருந்து வருகிறது. அதைத்தான் நாமும் பின்பற்றி வருகிறோம்.
இந்தக் குற்றச்சாட்டைக் கூறுமுன் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நம் நாட்டில் இரத்தக் கொதிப்பு, இனிப்பு நீர், புற்று நோய் என்பவை முக்கியமான ஆபத்தான நோய்களாக விளங்கி வருகின்றன. இந்த நோய்களின் மூலம் இறப்பவர் விகிதம் அதிகம் என்பதும் உண்மை. இப்படி பல்வேறு நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி போடும் போது அந்த வியாதிகள் கூட இறப்பை ஏற்படுத்தியிருக்கலாம்! ஆனால் குற்றச்சாட்டு என்னவோ பூஸ்டர் போட்டதனால் வந்தது என்று கூறுகிறோம்!
இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் எதிலும் நூறு விழுக்காடு உண்மையில்லை. சரி தவறு என்று அறுதியிட்டுக் கூற வழியில்லை. உங்கள் நேரம் சரியில்லை என்றால் எதுவும் நடக்கலாம். இந்த நேரத்தில் எது நடந்தாலும் அது பூஸ்டர் மேல் தான் போகும்!
சரியோ தவறோ பூஸ்டர் போட்டால் இறப்பு வரும் என்பது நமக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களிடையே ஒரு தவறான புரிதல் ஏற்பட வாய்ப்புண்டு. நாம் பூஸ்டர் போட்டால் இறப்பு வரும் என்கிற செய்தியோடு ஒருவரை பூஸ்டர் தடுப்பூசி போட அனுப்பி வைத்தால் அவர் திரும்பி வருவாரா என்பது சந்தேகமே!
இதனை ஒரு வதந்தியாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்! வேண்டாம் என்றால் எடுத்துக் கொள்ள வேண்டாம்! அவ்வளவு தான்!
No comments:
Post a Comment