பெரியவர் சாதாரண மனிதர் அல்லர். பெரும் படிப்பாளி.
நம்மில் பலர் வாழ்நாள் முழுவதும் புத்தகமும் கையுமாக இருப்போம். படிக்கின்ற பழக்கம் உள்ளவர்களால் சும்மா கைகளைக்கட்டிக் கொண்டு இருக்க முடியாது. படிக்கின்ற அந்த ஆர்வத்தை யாராலும் தடைபோட முடியாது.
இந்திய மாவீரன் பகவத் சிங் தூக்குமேடைக்குப் போக வேண்டிய நேரத்தில் புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தாராம். அவர் படித்து முடித்த பின்னரே தூக்குமேடைக்குப் போனாராம்! சாகப்போகிற நேரத்தில் கூட அவர் புதிதாக எதனையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தாராம்!
பெரியவர் குருமூர்த்தி வித்தியாசமான மனிதர். தமிழ் நாடு, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவர். தொழிலால் அவர் ஆசிரியர். தனது பட்டப்படிப்புக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை! அவர் ஆசிரியர் பணி செய்கின்ற காலத்தில் 12 பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். அவர் பணி ஓய்வு பெற்ற பின்னர் இன்னும் 12 பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இப்போது இன்னுமொரு பட்டப்படிப்பை அதாவது தனது 25-வது பட்டப்படிப்பை, தனது 82-வது வயதில், கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்!
அவருடைய 82-வது வயதில் இது தேவை தானா என்று நாம் கேட்கலாம். கல்வி என்று வந்துவிட்டால் அது தேவை தான். கல்வியால் யாரும் கெட்டுப் போவதில்லை. அறிவு வளர்ச்சிக்கு எந்தக் கட்டுப்பாடும் தேவை இல்லை.
இப்படி பட்டத்துக்கு மேல் பட்டத்தை அடுக்கிக்கொண்டே போவதால் அப்படி என்னதான் அவருக்குப் பயனாய் இருக்கிறது? இந்தக் கல்வி மூலம் அவருக்குக் கிடைத்தது என்ன? அவரே சொல்லுகிறார் "எல்லாவற்றிலும் ஒழுங்கு முறை, நேரம் தவறாமை, திட்டமிடல் எல்லாவற்றையும் விட நான் இளைஞனாகவும், மாணவனாகவும், உற்சாகமாகவும் இருப்பது எனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறது!" என்கிறார்!
உண்மை தான். பொதுவாக 82 வயதானவர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்? முதுமை, தள்ளாத வயது, சும்மா முணுமுணுத்தல், நடப்பதில் சிரமம், யாரோடும் ஒத்துப்போவாதவர் - இப்படி குற்றச்சாட்டுக்களை அவர்கள் மீது வைக்கிறோம்!
அதைவிட புத்தகங்களும் கையுமாக இப்படி மாணவனாக இருந்தால் நமக்கும் மகிழ்ச்சிதானே!
No comments:
Post a Comment