Sunday 2 January 2022

இதற்கு யார் காரணம்?

 


நமது நாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதும் அதன் காரணமாக அடுக்குமாடிகளில் உள்ளவர்களை வெளியேறச் செல்வதும்  தொடர்ந்து நடபெற்றுக் கொண்டிருக்கிறது.

நிலச்சரிவுகள் நாம் கேள்விப்படாத ஒன்றல்ல. அடுக்ககங்களில் உள்ளவர்களை வெளியறச் சொல்வதும் கூட நமக்குப் புதிது அல்ல. ஏற்கனவே கேள்விப்பட்டவைகள் தான்.

ஆனால் இப்போது அதிகமாகவே  கேள்விப்படுகிறோம். அதன் காரணமும் நமக்குத் தெரியும்.   எதிர்பாராத வகையில் கொட்டும் மழை, அதனால் ஏற்படும் பெரும்  வெள்ளம்   - இவைகள் தான் காரணம் என்பது  பெரும்பாலும் நமக்குத் தெரியும்.

இதற்கான காரணகர்த்தாக்கள் யார் என்பது தான் கேள்வி. ஏன் இப்படி ஒரு நிலைமை நமது மக்களுக்கு ஏற்பட்டது. இலட்சக்கணக்கில் பணம் செலவு செய்து வாங்கிய அடுக்கக  வீடுகள்  அடுக்கு அடுக்காக சரிந்து கொண்டிருக்கின்றன! யாரைக் குற்றம் சொல்லுவது? வீடு வாங்குபவர்கள் சராசரி, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.  ஒருசில அடுக்ககங்கள்  பணக்காரர்கள் வாழ்பவை.  அனைவருமே பணம் போடுபவர்கள் தான். அது ஒன்றும் இலவசம் அல்ல. எல்லாருமே உழைத்துச் சம்பாதித்தவை தான்.

ஆனால் குற்றவாளிகள் யார்? அரசாங்கம் தான். அரசியல்வாதிகள் தான். அரசாங்கப் பணியாளர்கள் தான். இவர்களுக்குக் கிடைக்கும் எலும்புத் துண்டுகளுக்காக இவர்கள் நாட்டையே காட்டிக் கொடுப்பார்கள். அப்படி இருக்கும் போது  நிலச்சரிவு ஏற்பட்டால் என்ன, கட்டடங்கள் இடிந்தால் என்ன, மனிதர்கள் செத்தால் என்ன புதைந்தால் என்ன - இது பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுகின்ற ஜென்மங்கள் இல்லை!  அவர்களுக்குப் பணம் வேண்டும். இதில் முதல் குற்றவாளி அரசியல்வாதிகள் தான்.  அவர்கள் "அவன் நானில்லை!" என்று கைகழுவிவிடுவார்கள்! குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் அனுமதி கொடுக்கும் அதிகாரிகள்.  என்ன தான் அரசியல்வாதிகளின் தூண்டுதல் இருந்தாலும் அரசாங்கத்தில் பணி புரிபவர்கள் தங்களது கடமையைத் தான் செய்ய வேண்டும். யாருடைய தூண்டுதலுக்கும் அவர்கள் பணியக் கூடாது.  அரசியல்வாதிகள் எந்தக் காலத்திலும் தங்களது தவற்றை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்! அதற்குச் சான்று சமீபகாலமாக நடைப்பெற்று வரும்  நீதிமன்ற வழக்குகள்!

சரி! இவ்வளவு எல்லாம் நடந்திருக்கிறதே அந்த அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா? ஐயோ! முடியாது! நாங்கள் எல்லாம் இரத்தத்தின் இரத்தம்,  சாப்பிடுவது ஒரே தட்டு, சாமி கண்ணை குத்தும் - அதைவிட  இப்படி எல்லாம் செய்ய எங்களுக்கு உரிமை உண்டு!  அரசியல் சாசனம் அதை எதிர்க்கவில்லை!

எப்படிப் பார்த்தாலும் நாடு இந்த நிலைமையில் தான் போய்க் கொண்டிருக்கும். இலஞ்சமற்ற அரசு அமையும் வரை நாம் இப்படியே பேசிக் கொண்டிருக்க வேண்டியது தான்! அவன் பாட்டுக்குத் திருடி கொண்டே இருப்பான், தரமற்ற இடங்களில் அடுக்ககங்களைக் கட்டிக் கொண்டே இருப்பான், நாமும் வாங்கிக் கொண்டே இருப்போம், நிலச்சரிவு ஏற்படும் போது செத்துக் கொண்டே இருப்போம்!  இப்போது என்ன செய்யலாம்? நாமும் அவனோடு சேர்ந்து "இது இறைவன் செயல்!" என்று சொல்லி  இறைவன் மீது பழி போடுவோம்! அது தான் உத்தமம்! யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள்! ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி!

ஆமாம்! யார் தான் இதற்குப் பொறுப்பு? இறைவா!   நீர் தான் பொறுப்பு என்றால் தான் அரசியல்வாதிகள் நிம்மதி அடைவார்கள்! 

No comments:

Post a Comment