நாம் சில செய்திகளைப் படிக்கும் போது நமக்குச் சிரிப்புத் தவிர வேறு ஒன்றும் வருவதில்லை!
இவர்களிடம் போய் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கலாமா என்று தான் தோன்றுகிறது.
தமிழ்ப்பள்ளிக் கட்ட நான்கு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இது பாரிட் புந்தார், பேராக் மாநிலத்தில் நடந்த சம்பவம். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம். அப்போது தலைவர் துன் சாமிவேலு தான் ம.இ.கா.வின் தலைவர்.
ஒரு வேளை பாரிட் புந்தார் ம.இ.கா.வினர் அந்த நிலத்தை மறந்து கூட போயிருக்கலாம். தலைவர் மறப்பார் என்பதற்கு ஆதாரமே இல்லை! அதற்கு அவசியமும் இல்லை!
அந்த நிலத்தின் இன்றைய நிலை என்ன என்கிற கேள்விகள் பல எழுந்தாலும் இன்று அது காடு மண்டிக்கிடக்கிறது! அது தான் இன்றைய நிலை!
ஆமாம், அந்த நிலம் யாருடைய பெயரில் இருக்கிறது என்று கேள்விகள் கேட்டால் அதை அவர்கள் விரும்பமாட்டார்கள். உனக்கேன் அவ்வளவு அக்கறை என்று நம்மைத் திருப்பிக் கேட்பார்கள்!
நமது நோக்கம் எல்லாம் நமக்குத் தெரிந்த ஒரு சில ஆலோசனையைக் கூறுகிறோம். அப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.
ம.இ.கா. வினர் மிகவும் செல்வாக்காக இருந்தகாலத்தில் பல இடங்களில் தமிழ்ப்பள்ளிகளுக்காக நிலங்கள் கொடுக்கப்பட்டன. அது அரசாங்கத்தின் பெருந்தன்மை! ஆனாலும் அந்த இடங்கள் என்னவாயிற்று என்று இன்றளவும் கேள்விகள் எழுத்தான் செய்கின்றன.
அதனால் நாம் சொல்ல வருவதெல்லாம் மாநில அரசாங்கங்கள் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்படும் நிலங்களை உடனடியாக வேலைகளை ஆரம்பித்துவிடுங்கள். உடனடியாக எதனையும் செயல்படுத்தவில்லை என்றால் - அதுவும் வருடக் கணக்கில் இழுக்குமென்றால் - அது யாருடைய பாக்கெட்டுக்கோ போய்விட்டது என்று பொருள்.
ஆனால் இந்த செய்தியோடு அனைத்தும் முடிந்துவிடவில்லை. அது ஒரு தொடர்கதை! இன்னொரு விவசாய நிலத்தைப் பற்றிக்கூட இன்று செய்தி வெளியாகி இருக்கிறது.
நீங்கள் பள்ளிகள் கட்டுகிறீர்களோ அல்லது கல்லூரி கட்டுகிறீர்களோ நிலம் கிடைத்ததும் வேலையை ஆரம்பித்து விடுங்கள். ஆனால் நீங்கள் செய்வதில்லை. ஏதோ ஏதோ காரணங்கள். ஆறப்போடுகிறீர்கள்! அப்படியே ஊறப்போட்டு விடுகிறீர்கள்!
அதனால் ஒன்று நமக்குப் புரிகிறது. உடனடி வேலை ஆரம்பிக்கவில்லை என்றால் அந்த நிலம் யாருடைய கைக்குப் போகும் என்பதை நம்மால் அனுமானிக்க முடியும்! இது ம.இ.கா.வின் வழமையான ஒரு வழி!
நீங்கள் என்னதான் "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!" என்று சொன்னாலும் அது அப்படித்தான் என்று சொல்ல நிறையவே இடமிருக்கிறது!
No comments:
Post a Comment