Tuesday 4 January 2022

மரங்கள் வேண்டாமோ?

 

                                                                Malaysian Forest
மலேசியாவில் மரங்களை அழிக்கின்ற வேலை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது நமக்குத் தெரியும்.

அது நல்லது கெட்டதா என்பது பற்றி யாருக்கும் கவலை இல்லை. அது நல்லது இல்லை என்பது அரசாங்கத்திற்குத் தெரியும். ஆனாலும் அது பற்றி அவர்கள் கவலைப்படுவதாக இல்லை.

ஒரு பக்கம் இந்த மரங்கள் மூலம் கொள்ளை இலாபம் அடிக்கும் அரசியல்வாதிகள்! அரசியலிலிருந்து அவர்கள் ஒய்வு பெற்ற பின்னர் இது தான் அவர்களது தொழில். முதலில் அரசியல்வாதிகள் பின்னர் தொழிலதிபர்கள்! பணம் சம்பாதிக்க எளிமையான வழி!

மரங்களை அழிப்பது என்பது மரங்களைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும். மனிதன் உயிர் வாழ மரங்கள் தேவை. தூய்மையான காற்று மனிதனுக்குத் தேவை என்றால் மரங்கள்  வேண்டும். மரங்கள் மூலம் தான் நமக்கு 'ஆக்ஸ்ஜிஜன்' கிடைக்கிறது. வெறும் தொழிற்சாலை புகையையும்,
கார்கள் வெளியிடும் புகையையும் சுவாசித்துக் கொண்டிருந்தால் நமக்கு நாமே  பகையாளியாக மாறிவிடுவோம்!

ஜொகூர் அரசாங்கம் இந்த உண்மையை உணர்ந்து தான் இப்போது மரங்களை நடும்  நடவடிக்கை எடுத்திருக்கிறது. 2025-ம் ஆண்டுக்குள் சுமார் 40 இலட்சம் மரங்கள், காடுகளை உருவாக்க  வேண்டும் என்னும் இலட்சியத்தைக் கொண்டிருக்கிறது. ஜொகூர் மாநிலம் மட்டும் தான் இதனைச் செய்ய வேண்டும் என்பதில்லை. எல்லா மாநிலங்களும் இதனைச் செய்யலாம். மக்களின் நல்வாழ்வு பற்றி அரசாங்கத்திற்கு அக்கறை இருக்குமானால் அவர்கள் இதனைச்  செய்து தான் ஆக வேண்டும்.

இப்போது நமது வீடுகளில்  சிறு சிறு மரங்கள் கூட வைக்க முடிவதில்லை. பக்கத்து வீட்டுக்காரன் சண்டைக்கு வருவானோ என்கிற சூழல் உண்டு! ஏதோ கருவேப்பிலைச் செடிகள், முருங்கை மரங்கள், வேப்பிலை மரங்கள் போன்ற சிறு வகை செடிகளை/மரங்களை நட்டு வைப்பது நமக்கு நல்லது. இவைகளும்  ஓரளவு நமக்குப் பிராணவாய்வைக் கொடுக்கின்றன. நமக்கு நல்லதைச் செய்வதைப் போல இன்னும் சிறு சிறு பறவை இனங்களுக்கும் ஓடி ஆடி ஆனந்தமாக  விளையாட  பயனாக அமைகிறது! ஆமாம்! எல்லாவற்றையும் சேர்த்துத் தான் நாம் பார்க்க வேண்டும்.

அரசாங்கம் செய்வது இருக்கட்டும். நமது  வீடுகளில்  என்னன்ன செடி வகைகளோ மர வகைகளோ நட்டு வளர்ப்பதை  நாம் ஊக்குவிக்க வேண்டும். அது நமக்கு நல்ல பயனையும் தரும். குறைந்தபட்சம் நல்ல காற்றை சுவாசிக்கவாவது அது அமையும். 

ஜொகூர் மாநிலம் மட்டுமல்ல எல்லா மாநிலங்களும் அதனைப் பின்பற்ற வேண்டும் என்பதே நமது ஆசை!

No comments:

Post a Comment