Monday 10 January 2022

தொங்கு பாலங்கள்!

 

                            Student crossing a suspension bridge to  S.K.Sibugo Besar, Sandakan

குரங்குகள் தொங்கலாம்! அவைகளுக்குத் தொங்கு பாலங்கள் தேவை இல்லை! தொங்கலாட்டம் போடுவது அவைகளின் இயல்பு!

ஆனால் பள்ளிக் குழந்தைகளைத் தொங்க விடுவது கயமைத்தனம்.  அவர்களை இப்படியும் அப்படியும் ஆடவிடுவது  அயோக்கியத்தனம்.

பள்ளிகள் ஆரம்பித்துவிட்டன. குழந்தைகள் பள்ளிகள் போக ஆரம்பித்துவிட்டனர். எங்கும் மகிழ்ச்சி. நீண்ட நாள் சக  தோழர்களைப் பார்ப்பதில் ஒரு சுகம். பிடித்த பள்ளி ஆசிரியர்களைப் பார்ப்பதில் பரவசம். காரணம் பிள்ளைகள் பள்ளிகள்  போக முடியாமல்  'காய்ந்து' போய்விட்டனர்! இயங்களை வகுப்புக்கெல்லாம்  நமது குழந்தைகள் இன்னும் பக்குவப்படவில்லை!  கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அது சரியாக இருக்கலாம்.

சண்டாக்கான், சபா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் உள்ள பிள்ளைகள் எப்படி பள்ளிக்கூடம் போகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். இப்படியெல்லாம் தொங்குகின்ற பாலங்களைக் கடந்து தான் பள்ளிக்கூடம் போக வேண்டும்! நிச்சயம் பிள்ளைகள் பள்ளியிலிருந்து திரும்பும் வரை பெற்றோர்கள் நிம்மதியாக இருக்க வழியில்லை.

நம்முடைய கேள்வி எல்லாம் அங்கு எந்த சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ யாருமே இல்லையோ? இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? இது  சமீபத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட அசௌகரியம்  என்றால் நாம் அதனைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஆண்டுக் கணக்கில் இருக்கும் ஒரு பிரச்சனையை அறியாதவர்களா இவர்கள்?  ஒரு சரியான பாதையை- பாலத்தைக் கூட மக்களின் நலனுக்காக, பள்ளிப் பிள்ளைகளின் நாலனுக்காக  கட்டிகொடுக்கத் தெரியாத அரசாங்கம் நமக்குத் தேவையா?

எனக்குத் தெரிந்த வழி ஒன்றே ஒன்று தான். இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்லதொரு பாலம் கட்டிக் கொடுக்கும் வரை தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கல்வி அமைச்சுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும். வேறு வழிகளெல்லாம் இவர்களின் காதுகளுக்கு எட்டப் போவதில்லை!

அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உடனடியான நிவாரணம் கிடைக்குமா அல்லது அடுத்த தேர்தல் வரை பொறுத்திருக்க வேண்டுமா என்பது வெகு விரைவில் தெரிய வரும்.

அது வரை குழந்தைகள் தொங்கிக் கொண்டு தான் போக வேண்டும். பெற்றோர்கள் பயந்து கொண்டு தான் வாழ வேண்டும். என்ன செய்ய? இது தான் ஜனநாயகம்!


No comments:

Post a Comment