Saturday 15 January 2022

வருந்துகிறோம்!

 

                                         Former Malaysian Footballer Serbegath Singh dies

முன்னாள் காற்பந்து வீரர், செர்பெகத் சிங் தீடிரென காற்பந்து உலகிலிருந்து நிரந்தர விடைபெற்றார்! 

இனி அவர் கால்கள்  ஓடாது ஓளியாது! அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்தன. அவர் சைக்கிளில் போய்க் கொண்டிருக்கும்  போது   கீழே விழுந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாக காவல்துறை உறுதி செய்தது.

அவருக்கு வயது 61.  ஜனவரி 12-ம் தேதி  இரவு சுமார் 7.30  மணி அளவில் அவர் மரணமடைந்தார்.   ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். நிச்சயமாக  சாக வேண்டிய வயதில்லை. இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டியவர். ஆனால் மரணம் எப்போது சம்பவிக்கும் என்று யார் அறிவார்? சம்பவித்துவிட்டது. அவர்க்கு ஒதுக்கப்பட்ட   காலம் அவ்வளவு தான!

பொதுவாகச் சொன்னால் அவர் எங்கள் காலத்து பந்து விளையாட்டாளர். எப்போதும் தற்காப்பு விளையாட்டாளராகவே இருந்தவர். அந்த காலக்கட்டத்தில் நிறைய இந்திய விளையாட்டாளர்கள் பந்து விளையாட்டுத் துறையில் இருந்தனர். அனைவரும் அற்புதமான விளையாட்டாளர்கள். அந்த குழுவில் இவரும் சிறந்த விளையாட்டாளர்.

இப்போது எனக்குப் பந்து விளையாட்டு  என்பது  தொடர்பு இல்லாத விளையாட்டாகப் போய்விட்டது! உண்மையைச் சொன்னால் சில பழைய நினைவுகள் உண்டே தவிர பீற்றிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை!

தொலைக்காட்சிகளில் கூட பந்து விளையாட்டுகளைப் பார்ப்பதில்லை. அதனால் என்ன?  இளைய தலைமுறை பார்க்காமலா போய்விட்டார்கள்? எல்லா விளையாட்டுகளையும் எல்லாக் காலங்களிலும் பார்க்கின்ற இரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். இருக்கத்தான் வேண்டும். ஆனால் அனைத்தும் இன ரீதியில், மத ரீதியில் என்கிற போது விளையாட்டுகளில் ஈடுபாடு  இல்லாமல் போய்விட்டது! எக்கேடு கெட்டால் எங்களுக்கு என்ன என்கிற எண்ணம் வந்துவிட்டது!

அந்த காலக்கட்டத்தை நினைத்து பார்க்கின்ற போது அது ஒரு பொற்காலம் என்றே தோன்றுகிறது. நிறைய இந்திய விளையாட்டாளர்கள்.  மலேசியா உலகளவில் பல தங்கப்பதக்கங்களை வென்றது. அதற்குக் காரணமானவர்கள் செர்பகத் சிங் போன்றவர்கள். நல்ல திறமையான, விளையாட்டாளர்கள் எல்லா இனத்திலும் இருந்தார்கள். மலாய், சீன, இந்தியர் அனைவரும் ஒரே குடும்பம் என்கிற எண்ணம் மட்டுமே அப்போது தலைதூக்கி நின்றது!

குடும்பத் தலைவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினருக்கு நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

No comments:

Post a Comment