Friday 21 January 2022

கோரிக்கையை நிறைவேற்றுங்கள்!

 

பள்ளிகளுக்குக் கிடைக்கும் இலவச உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவில் வெறும் சோறும் குழம்பும் மட்டும் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது.

எந்தப் பள்ளியிலிருந்து அந்த புகார் வந்தது என்பதை அறிய கல்வி அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் லோ லோ என்று அலைந்து கொண்டிருக்கின்றனர்!

ஆனாலும் கல்வி அமைச்சர் அந்த செய்தியை மறுத்திருக்கிறார்.  அது இயற்கை தான்! முதலில் மறுப்பதும் பின்னர் அதனை மறுப்பதும் அரசியல்வாதிகளின் வாடிக்கையான ஒன்று தான்.

பள்ளிகளுக்கு உணவு சேவைகளை வழங்கும் நடத்துனர்களைத்தான் முதலில் இந்த செய்தி பாதிக்கும். இந்த நேரத்தில் நாம் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். கல்வி அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் மஸ்லி  மாலிக் இந்த  உணவுத் திட்டத்தைப் பற்றி கருத்துரைத்திருக்கிறார். இந்த திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதில் உண்மை உண்டு. எப்போதோ ஒதுக்கப்பட்ட பணத்தை வைத்துக் கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிருக்க முடியாது.

கொரோனாவுக்குப் பின்னர் விலைவாசி என்பது யாரின் கட்டுப்பாட்டிலும் இல்லை. வல்லவன் வைத்தது தான் சட்டம் என்கிற நிலைமைக்கு நாடு வந்துவிட்டது! இடைப்பட்ட காலத்தில் உள்ள அரசியல் திருடர்கள் எது பற்றியும் கவலைப்படவில்லை. தங்களின் ஆதயத்தைப் பற்றியே இன்னும் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர்! இவர்களுக்கு நாட்டு நலன் என்பது பற்றிக் கவலையில்லை!

விலைவாசிக்கு ஏற்றவாறு நடத்துனர்களின்  ஒப்பந்தங்களும்  திருத்தப் பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படித்தான் நடக்கும்! ஏதோ இந்த அளவுக்கு - சோறும் குழம்பும் - என்கிற நிலையிலாவது சாப்பாடு போட்டிருக்கிறார்களே அதைப் பாராட்டத்தான் வேண்டும்! வெறும் சோறு மட்டும் போட்டிருந்தால் என்ன ஆவது? மாணவர்கள் பட்டினி தான் கிடக்க வேண்டும்!

இந்த ஒப்பந்தத்தில் உள்ளவர்கள் பெரும் பணக்காரர்கள் இல்லை. சிறு தொழில் செய்பவர்கள் என்கிற ரீதியில் தான் பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஆரம்பமே தடைக்கற்களைப் போட்டால் அவர்கள் எப்படி அடுத்த அடி எடுத்த வைக்க முடியும்? இது போன்ற ஒப்பந்தங்கள் கிடைக்க  அவர்கள் பல பேருக்கு வாக்கரிசி போட வேண்டும்! நிறைய போட்டிகள்! என்ன செய்வார்கள்?

அரசாங்கம் சும்மா மௌனமாக இராமல் அந்த நடத்துனர்களின் கோரிக்கைகள் கவனிக்கப்பட வேண்டும் என்பது தான் எங்களது வேண்டுகோள்!

No comments:

Post a Comment