Sunday 23 January 2022

300 வெள்ளி 45,000 வெள்ளியாக எகிறியது!


 தமிழ் நாட்டில் கந்து வட்டி என்பார்கள்! 

நம் நாட்டில் ஆ லோங் என்பார்கள்! ஆனால் இரண்டுமே ஒரே கொள்கை உடையவை. இளிச்சவாயனா கையிருப்பையெல்லாம் பிடுங்கு! நல்லவனா நடுரோட்டில் வைத்து அனைத்தையும் பிடுங்கிவிட்டு  அவனை நாரடி!  அவனது காருக்கு சிவப்பு பெயிண்ட் அடி! வீட்டுக்குச் சிவப்பு பெயிண்ட் அடி!

சமீபத்தில்  அவசரத்துக்காக ஆலோங் ஒருவரிடம் 300 வெள்ளி கடன் வாங்கப் போய் அந்த மனிதரால் அந்தப் பணத்தை  இன்றுவரை கட்டவே  முடியவில்லை!  மூந்நுறு வெள்ளிக்காக பல ஆயிரங்கள் கட்டியாயிற்று! ஆனால் கடனுக்கு முடிவே வரவில்லை!

கடைசியில் அவர் ஓடி ஒளிய வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அத்தோடு வீட்டையும் மாற்ற வேண்டி வந்து விட்டது! என்ன தான் மாற்றினாலும் அவர்கள்  எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள்! ஆனால்  இந்த முறை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை! கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்காக முகநூல் இன்னும் பல வழிகளில் அவரின் புகைப்படத்தைப் போட்டு அசிங்கப்படுத்தினார்கள்! "அவரைப் பார்த்தால் அடியுங்கள்! கடனைக் கட்டாத அயோக்கியன்!" என்பதாக ஆங்காங்கே எழுதி வைத்தார்கள்!

இந்த வேதனையை  இனிமேலும்  சகித்துக் கொள்ள முடியாத அந்த மனிதர் கடைசியாக இஸ்லாமிய பயனீட்டாளர் சங்கத்தினரிடம் புகார் செய்துள்ளார். அவர்கள் இந்த பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

நம்மிடம் உள்ள கேள்வி என்னவென்றால் ஆலோங் இந்த அளவுக்குப் பலம் வாய்ந்தவர்களாக நாட்டில் வலம் வந்து கொண்டிருப்பதற்கு யார் காரணம்?  அரசியல்வாதிகளின் பணமும் இவர்களின் தொழிலுக்கு உதவுகிறது என்பதாகவும் சொல்லப்படுகிறது!

பொதுவாக நம்மில் பலருக்குத் தீடிரென பணத்தேவை ஏற்படத்தான் செய்கிறது. இல்லையென்று சொல்ல முடியாது. வங்கிகள் உடனடியாகத் தூக்கிக் கொடுக்கத் தயாராக இல்லை.   அதனால் தான் நமக்கும் ஆலோங் போன்ற  வட்டி முதலைகளின்  சேவை தேவைப்படுகிறது. பிரச்சனை என்னவெனில்  அவர்கள் நேர்மையானவர்களாக இல்லை! இது தான் பிரச்சனை.

வட்டிமுதலைகளைப் பற்றியான  போலிஸ் புகார்கள் நிறையவே உண்டு. அவர்கள் மீதான நடவடிக்கைகள் தான் திருப்திகரமாக அமையவில்லை.  கடுமையான நடவடிக்கை இல்லை என்பதால் எல்லா வகையான ஆயுதங்களையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர்.  மக்களைப் பயமுறுத்துகின்றனர். மரணமும் விளைவிக்கின்றனர்.

நமது சட்டங்கள் கடுமையாக இல்லையா அல்லது அமல்படுத்துவதில் பலவீனங்கள் உள்ளனவா என்பது நமக்குப் புரியவில்லை. நம்முடைய அனுபவங்கள் எல்லாம் காவல்துறையைத் தான் குற்றம் சாட்டுகின்றன!

இவர்களின் அராஜகம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கேட்பார் இல்லை! எத்தனை நாளைக்கு இவர்களின் அராஜகம் தொடரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


No comments:

Post a Comment