Thursday 13 January 2022

யாருக்கு அதிகாரம்?

                                                                                                                                                                      

                                           MACC Chief  -  Azam Baki speaks to the media
இலஞ்ச ஊழல் ஆணையத்தின் தலைவர் அஸாம் பாக்கி  மீதான  செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை.

அவர் ஒரு பக்கம் அறிக்கை விடுகிறார்! இன்னொரு பக்கம் ஊடகங்கள் அறிக்கை விடுகின்றன! ஒரு முடிவே இல்லை!

யார் குற்றவாளி, யார் நிரபராதி ஒன்றுமே புரியவில்லை!

அஸாம் பாக்கிக்கு போலீஸ் பின்னணி இருப்பதால் அனைவருமே கொஞ்சம் அடக்கித் தான் வாசிக்க வேண்டியிருக்கிறது. அவர் எடுத்தவுடன் "இத்தனை கோடி!" என்று பயமுறுத்துகிறார்! யாரும் வாயைத் திறக்க முடியாதபடி செய்துவிடுகிறார்.

ஆமாம்,  அஸாம் பாக்கியின் பதவி என்பது யாருமே கேள்வி கேட்க முடியாத ஒரு பதவியா? எனக்குத் தெரியவில்லை!  அவரை வேலையை விட்டு நீக்க வேண்டுமானால்  மாமன்னரால் தான் முடியும் என்கிறார்கள். இன்னொரு பக்கம் நமது பிரதமரால் தான் முடியும் என்கிறார்கள்.  ஆக,  அது ஒரு பெரிய பதவி என்பது நமக்குத் தெரிகிறது! யாராலும் கைவைக்க முடியாத ஒரு பதவி என்பது உண்மை தான்!

பதவி நீக்கம் செய்ய முடியாது என்பது உண்மையாயிருந்தாலும் வேறு ஒரு கேள்வியும் எழுகிறது. ஊதிய உயர்வு, அவருக்கான வருடாந்திர போனஸ் அல்லது தினசரி அலுவல் காரணமாக வெளியே போகும் போது அதற்கான சலுகைகள் -  என்று இப்படியெல்லாம் பல வரும்படிகள் இருக்கின்றன. அதனையும் அவரைவிட  உயர் பதவியில் உள்ளவர் தான் உறுதிப்படுத்த வேண்டும். அரசாங்க நடைமுறை என்னவென்பது நமக்குத் தெரியாது. சும்மா வெறும் கேள்வியோடு நிறுத்திக் கொள்வோம்!

என்ன தான் அவரைப்பற்றியான குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. அவர் குற்றவாளி இல்லை என்பதை வெளிப்படையாகச் சொல்ல மறுத்தாலும் அத்தோடு அவர் நிறுத்திக் கொள்ளுகிறார்! அவருக்குச் சார்பாக பாஸ் கட்சியினர்  ஆதரவாக இருக்கின்றனர். அஸாமுக்கு வரும் எதிர்ப்பெல்லாம் ஊடகங்கள் செய்கின்ற அடாவடித்தனம் என்கின்றனர் பாஸ் கட்சியினர்!  அவர்களைப் பொறுத்தவரை அது உண்மையாக இருக்கலாம்!

சராசரி மனிதர்களான நமக்கு எந்த ஒரு முடிவையும் சொல்ல முடியவில்லை. சொல்லக் கூடாது என்கிறார் அஸாம் பாக்கி! ஆமாம், ஜனநாயகத்தை எல்லாவகையிலும் அடக்கி விடுகிறார்கள்! நாமும் அடங்கி விடுகிறோம்!

யாருக்கு அதிகாரம்? நிச்சயமாக நமக்கில்லை!

No comments:

Post a Comment