Thursday 20 January 2022

ஏன் இந்த தடுமாற்றம்?

 


பத்துமலை ஆலய வளாகத்தினுள் கோழி பர்கர் விற்பனை என்பது யாரும் நினைத்துப் பார்க்க முடியாத  ஒன்று!

இந்து கோயில்களில் அசைவம் என்பதெல்லாம் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. இந்துக்களின் கலாச்சாரம் அறியாதவர்கள் இறைச்சி விற்பனை செய்கிறார்கள்! கலாச்சாரம் அறியாதவர்கள் என்பதைவிட  "கலாச்சாரத்தைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை!" என்று போதிக்கப்பட்டவர்கள்!

இதைவிட அநாகரீகம்  அதனை வாங்கி சாப்பிடும் நம் மக்கள்.  அது இலவசமாக இருந்தால் என்ன அல்லது காசாக  இருந்தால் என்ன நாமும் அவர்களோடு சேர்ந்து அசிங்கமான - அந்த புனிதமான இடத்தில் அவர்களிடமிருந்து வாங்கிச் சாப்பிடுகிறோம்! அந்த அளவுக்கு நாம் நமது சமயத்தை அறியாதவர்களாக இருக்கிறோம்!

இதைவிட கேவலம் பத்துமலை தேவஸ்தானம்.  இந்தியர்கள் கடைகள் போட்டால்  ஆயிரமாயிரம் கேள்விகளைத் தொடுக்கும்  தேவஸ்தானம் மலாய்க்காரர்கள் கடைகள் போட்டால் ஒரு கேள்வியும் கேட்கமாட்டார்களோ! மலாய்க்காரர்கள் கடைகள் போட்டால் அவர்கள் விற்கும் பொருள்கள் என்ன என்பதை அறியாதவர்களா? அவர்கள் விற்பதெல்லாம் பெரும்பாலும் இறைச்சி சம்பந்தப்பட்டது தான் என்பது நமக்குத் தெரிந்தது தான். அவர்கள் தெரிந்த தொழிலை அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் மீது யாரும் குற்றம் சுமத்தவில்லை.

ஆனால் இங்கு குற்றம் சுமத்தப்படுபவர்கள் பத்துமலை தேவஸ்தானத்தினர்  தான். முன்னாள் பிரதமர் நஜிப் கூட  வேட்டி அணிந்து கொண்டு தைப்பூச தினத்தன்று  கலந்து கொண்டது நமது கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் என்பது தான்.  அப்படியென்றால் இந்துக்களின் கலாச்சாரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது என்பதல்ல. ஆலய வளாகத்தினுள் இறைச்சி தடைசெய்யப்பட்ட ஒன்று என்பதைப் பலரும் அறிந்திருக்கின்றனர்.

ஆனாலும் மிகவும் சாமர்த்தியமாக ஆலயத்தினுள் உள்ளே புகுந்து பர்கர் வியாபாரம் நடப்பெற்றிருக்கிறது! இதற்கு தேவஸ்தானம் தான் பதில் சொல்லும் நிலையில் இருக்கிறது. தனிப்பட்ட வியாபாரமாக இருந்தாலும் சரி அல்லது ஏதோ ஒரு நிர்வாகத்தின் கீழ் வியாபாரம் நடைப்பெற்றிருந்தாலும் சரி அதற்கான பதில் தேவஸ்தானத்திடம் மட்டுமே இருக்க முடியும்!

எப்படியோ பர்கர் வியாபாரம் நடைப்பெற்றிருக்கிறது! செய்யக்கூடாது தான் ஆனால் செய்யப்பட்டிருக்கிறது!  பத்துமலை தேவஸ்தானம் என்ன பதில் வைத்திருக்கிறது என்று பார்ப்போம்!

No comments:

Post a Comment