Monday 31 January 2022

கட்டுமானப் பணிகளை நிறுத்துக!

கட்டுமானப் பணிகள் எப்போதும் போல தொடர்கிறது என்பதை அறியும் போது  நம்மால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை! 

மக்களின் நலனில் மேல் அக்கறை இல்லாத ஓர் அரசாங்கம் தான் இப்படியெல்லாம் ஈடுபடும் என்பது நமக்குத் தெளிவாகிறது.

சமீப காலத்தில் ஒரு சில இடங்களில் ஏற்பட்ட வெள்ளம் என்பது 'வழக்கம் போல' என்று சொல்லுவதற்கில்லை. மிக மிக அபூர்வமானது. அசாதரணமானது என்று அனவரும் அறிந்திருக்கிறோம்.

பெருவெள்ளம் என்றால் நாம் அறிந்தது எல்லாம் கிளந்தான், திரங்கானு, ஜொகூர் போன்ற மாநிலங்களைத்தான் இதுவரை நாம் அறிந்திருக்கிறோம்.

ஆனால் இந்த முறை அந்த மாநிலங்களில் ஏற்படாத  அளவுக்கு சிலாங்கூர், நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் ஒரு சில இடங்களில் வரலாறு காணாத மழை என்கிறார்களே அது நிறைவேறியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் என்றால் எல்லாத்தரப்பும் உண்டு. ஏழை, நடுத்தர, பணம் படைத்த மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த பெரும் மழையை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை.

இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் பெரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில்  கட்டுமானப் பணிகள் தடை செய்யப்பட வேண்டும் என்பது தான்.  இப்போது வந்த  பெரும் வெள்ளம் என்பதே  ஏற்கனவே செய்யப்பட்ட கட்டுமானப் பணிகளால் வந்த விளைவு என்பது புரியும்.

வீடுகள் கட்ட வேண்டும் சரி. பெரிய பெரிய கட்டடங்கள் கட்ட வேண்டும் சரி.  வெறும் கட்டடங்களைக் கட்டிப்போட்டு விட்டால் "எங்கள் வேலை முடிந்தது" என்கிற மனோபாவம் சரியானதல்ல. அதன் பின் விளைவுகள் என்னதாக இருக்கும், எப்படி இருக்கும் சுற்றுப்புறங்களில் இருக்கும் பெரும்பாலான மக்கள் வாழும் இடங்களின் நிலை என்னவாகும்  இதையெல்லாம் யோசித்து தான் கட்டடங்கள் எழுப்ப வேண்டும்.  அங்குள்ள நீர்நிலைகள், நீர் வெளியேற்றம் போன்றவைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இது பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. எல்லாமே பணமயமாகி விட்டது. எப்படி செய்தாலும் யாரும் எந்த கேள்வியைக் கேட்கக் கூடாது என்கிற நிலைமைக்கு நாம் வந்துவிட்டோம். அந்த வன்மம் இன்னும் தொடர்கிறது.

இனி மேலாவது சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது தான் நாம் சொல்ல வருவது. இப்போது பெரும் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் நிறுத்தப்பட வேண்டும். அந்த பூமி கட்டுமானத்துக்கு ஏற்ற பூமியா என்பது கண்டறியப்பட வேண்டும்.

இப்போது நடந்ததை  ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இனி வருங்காலங்களில் அனைத்தும் சரி பார்த்து கட்டடங்கள் கட்ட அனுமதி கொடுக்கப்பட வேண்டும். இலஞ்சம் ஊழல் பெருகிவிட்ட இந்த காலக் கட்டத்தில் எந்த ஒரு நல்லதும் ஏற்றுக்கொள்ளப்படாது  என்பதும் நமக்குப் புரிகிறது. செவிடன் காதில் சங்கு ஊதினால் ஒரு வேளை கேட்டாலும் கேட்கலாம். ஆனால் அரசியல்வாதிகளின் காதில் எதுவுமே விழாது!

No comments:

Post a Comment