நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் அரசியலில் இருந்தவர்கள் எல்லாம் பெரும்பாலும் ஆசிரியர்களாகத் தான் இருந்தார்கள். அப்போது படித்தவர்கள் என்றால் அவர்கள் ஆசிரியர்களாகத்தான் இருப்பார்கள்; இருந்தார்கள்.
ஆனால் இன்றைய நிலை மாறிவிட்டது. அரசியல் அறிவு இருக்கிறதோ இல்லையோ, நாட்டுப் பற்று இருக்கிறதோ இல்லையோ,, மொழி, இனப்பற்று இருக்கிறதோ இல்லையோ அரசியலுக்கு வருபவர்கள் தங்களைப் பட்டதாரிகள் என காட்டிக் கொள்கிறார்கள்! பணம் கொடுத்தால் இப்போது அதற்கான சான்றிதழ்களையும் பெற்று விடலாம்!
இது நாள்வரை ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பதாகத்தான் நாம் கேட்டு வந்திருக்கிறோம். இப்போது தீடீரென அரசியலில் ஈடுபடலாம் என்று கல்வியாளர்கள் சொல்லவில்லை! அரசியல் துரோகிகள் தான் கூறி வருகின்றனர்! உண்மையில் இது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒரு செய்தி. வரவேற்கக் கூடியது அல்ல.
ஏற்கனவே நமது கல்வித்தரம் மெச்சும்படியாக ஒன்றும் இல்லை. மெச்சும்படியாக இருந்தால் நமது அரசியல்வாதிகள் ஏன் தங்கள் பிள்ளைகளை மழலை வகுப்புகளுக்குக் கூட ஆஸ்திரேலியா, அமரிக்கா, இங்கிலாந்து என்று அனுப்பி வைக்கிறார்கள்? தரத்தை அறிந்தவர்கள் அதைத்தானே செய்வார்கள்!
ஆசிரியர்கள் அரசியல்வாதிகளாக மாறினால் என்ன நடக்கும்? ஆசிரியர் சங்கங்கள் அம்னோ ஆசிரியர் சங்கம், ம.இ.கா. ஆசிரியர் சங்கம், ம.சீ.ச. ஆசிரியர் சங்கம், ஜ.செ.க. ஆசிரியர் சங்கம். பி.கே.ஆர். ஆசிரியர் சங்கம் என்று ஆசிரியர் சங்கங்கள் பிரிந்து போய் கிடக்கும்! பள்ளிகளில் பாடம் போதிக்கிற நேரத்தில் அரசியல் பாடம் நடத்துவார்கள்!
பதினெட்டு வயதானவர்கள் வாக்களிக்கலாம் என்பதறகும், ஆசிரியர்கள் அரசியலில் பங்கெடுக்கலாம் என்பதற்கும் நாமும் ஒரு முடிச்சு போட்டு வைக்கலாம் என்றே தோன்றுகிறது! ஜொகூரில், பதினெட்டு வயதுகள் என்ன செய்யும் என்பதை வரப்போகிற மாநிலத் தேர்தல் தான் பதில் சொல்லும். இதை எல்லாம் சேர்த்துத்தான் இந்த ஆசிரியர் அரசியல் பங்கெடுப்பு என்பதைப் பார்க்க வேண்டும்.
தலைமை ஆசிரியர் நியமனம் என்பது அரசியல்வாதிகளுக்குத் தான் முதலிடம். அல்லது கல்வி சம்பந்தப்பட்ட அனைத்துப் பதவிகளிலும் அரசியல் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கும். பொதுவாக கல்வியாளர்கள் ஒதுக்கப்படுவார்கள். சில்வண்டுகள் தான் கல்வித்துறையை கையில் வைத்திருக்கும்!
எது எப்படி இருப்பினும் ஆசிரியர்களின் அரசியல் பங்கெடுப்பு என்பது எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஆசிரியர் பணியில் இருந்து கொண்டே அரசியல் என்பது அடாவடித்தனம்!
கல்வியாளர்கள், பெற்றோர்கள் அனைவரும் சேர்ந்து இது போன்ற முட்டாள் தனமான யோசனையை எதிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment