வெள்ளம் போன்ற பேரிடர்கள் வரும் போது ஓடிப் போய் ஒளிந்து கொள்வதும் வெள்ளம் ஓய்ந்து போன பின்னர் வெளியே ஹாயாக வந்த வெள்ளம் வரும் போது என்னன்ன செய்ய வேண்டும் என்பதை மக்களுக்கு அறிவுறுத்துவதும் வாடிக்கையாகவே போய்விட்டது!
மக்கள் ஆபத்திலிருக்கும் போது சமயப் புத்தகங்களைத் திருப்பித் திருப்பிப் பாரப்பதற்கெல்லாம் நேரம் இல்லை. ஆபத்தில் இருப்பவரை எப்படிக் காப்பாற்றலாம் என்று தான் தோன்றுமே தவிர வேறு எண்ணங்கள் ஏற்பட வாய்பில்லை! அங்கு மதமோ, இனமோ, சாதியோ எதுவும் எடுபடாத ஒரு சூழல்!
நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொஞ்சம் ஒயந்த போது வீடுகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அனைத்தையும் சுத்தம் செய்யும் வேலைகளில் மலேசியர்கள் ஒன்று சேர்ந்து ஈடுபட்டிருந்தது ஒரு சிலருக்கு அது பேசும்பொருளாக மாறிவிட்டது! ஈடுபட்டவர்களுக்கு அது மனிதாபிமானம். ஈடுபடாதவர்களுக்கு அது ஒரு மதப் பிரச்சனை!
உஸ்தாஸ் ஒருவர் சமீபத்தில் பேசிய பேச்சு ஒன்று எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பள்ளிவாசல்களை இந்துக்கள் சுத்தம் செய்வது பிரச்சனையாக இல்லை. அது அரசாங்க செலவை மிச்சப்படுத்துவது. ஆனால் இந்து கோயில்களை முஸ்லிம்கள் சுத்தம் செய்வது மாபெரும் பாவம்! எப்படி? இந்து கோயில்கள்: விபச்சார விடுதிகள்! கேளிக்கை மையங்கள்! சூதாட்ட களங்கள்!
இப்படித்தான் வர்ணித்திருக்கிறார் அந்த உஸ்தாஸ்! இந்த அளவுக்கு அவரால் எப்படி வர்ணிக்க முடிந்தது? அவர் தனது சொந்த அனுபவத்திலிருந்து இதனைப் பேசுகின்றாரா? அவர் எந்தக் கோவிலில் விபச்சாரம் செய்தார்? எந்தக் கோவிலில் சூதாட்டம் ஆடினார்? எந்தக் கோயிலில் கேளிக்கைகள் புரிந்தார்?
ஒரு வழிபாட்டுத்தலத்தை எந்த அளவுக்கு இவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பது நம்மாலும் நம்ப முடியவில்லை! அல்லது இதனையெல்லாம் எனது நண்பர்கள் செய்திருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறாரா! அல்லது வேண்டுமென்றே வழிபாட்டுத்தலங்கள் இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல வருகிறாரா?
இந்து கோயில்கள் மட்டும் தான் புனிதம் அற்றவை என்று இவரால் நிருபிக்க முடியுமா? எந்தவொரு வழிபாட்டுத்தலங்களை எடுத்துக் கொண்டாலும் நூறு விழுக்காடு புனிதம் என்பதெல்லாம் இல்லை. சும்மா சொல்லலாம்! அவ்வளவு தான்! இன்று நாட்டில் கொள்ளையடிப்பவர்கள் எல்லாம் புனிதம் மிகுந்த புண்ணிய தலத்திலிருந்து தான் வருகிறார்கள் என்பதை உஸ்தாஸ் மறைக்க முடியுமா?
உஸ்தாஸ் போன்றவர்கள் நாட்டிற்கு எது நல்லதோ அதைப் பேச வேண்டும். நாட்டில் கலவரங்கள் ஏற்படும்படியான விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். ஆன்மீகத்தில் சிறியவன் பெரியவன் என்று பேசுவது அநாகரீகம்.
மீண்டும் சொல்லுகிறேன்! வழிபாட்டுத்தலங்களை அசிங்கப்படுத்த வேண்டாம்!
No comments:
Post a Comment