மக்களே! பக்தர்களே! இந்து பெருமக்களே! கொரோனா தொற்று நோய் என்பது எல்லாருக்குமே பொதுவானது தான்
நமக்குத் தெரிந்த வரை யாரும் விதிவிலக்கல்ல. யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். இந்த இனம், இந்த மதம், இந்த நிறம் போன்ற எதுவும் அந்த வியாதி கண்டு கொள்வதில்லை! யாரை வேண்டுமானாலும் அது போட்டுத் தாக்கும்! போட்டுத் தூக்கும்! அதற்குத் தெரிந்ததெல்லாம் ஒரே வழி தான். தாக்கு தூக்கு அது மட்டும் தான்! அதனை மீறி நீங்கள் பிழைத்து விட்டால் நீங்கள் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பது தான் பொருள்!
பத்துமலை திருவிழா என்பது சாதாரண திருவிழா அல்ல. எந்த ஒரு சமயத் திருவிழாவுக்கும் இல்லாத பக்தர்கள் கூட்டம் இந்த ஒரு திருவிழாவுக்கு மட்டுமே! மலேசியத் திருவிழாக்களில் ஓரே ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிகமான மக்கள் கூடுகின்ற இடம் என்றால் அது பத்துமலை திருத்தலம் தான்!
இப்போது கொரோனா தொற்று நோய் காலத்தில் பக்தர்களின் வருகை குறையுமென்று நினைத்தாலும் அதற்கான வாய்ப்பும் குறைவு தான்! காரணம் கோயில் குளம் என்றால் எந்நாளும் மக்கள் கூட்டம் குறைவதில்லை!
இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் தொற்று நோய் நம்மை வட்டமடித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். நம்மில் பெரும்பாலோர் அரசாங்கம் சொன்னபடி இரண்டு தடுப்பூசிகளைக் போட்டுக் கொண்டவர்கள் தான். ஆனால் அத்தோடு அனைத்தும் முடிந்துவிட்டதாக நினைப்பது தவறு. ஊசி போட்டுக் கொண்டவர்கள் மிகவும் தைரியத்தோடு வெளியே சுற்றலாம் என்பது தவறு. இன்னும் கட்டுப்பாடுகள் தேவை என்பதாகத்தான் ஆய்வுகள் கூறுகின்றன.
கொரோனா என்பது நமது நாட்டுப் பிரச்சனை மட்டும் அல்ல. இது உலகளாவிய பிரச்சனை. அதனால் ஆய்வுகள் அடிக்கடி வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன. தடுப்பூசி போடுவதால் வியாதியிலிருந்து கொஞ்சம் பாதுகாப்பு. அவ்வளவு தான். அது ஒன்றும் முழு பாதுகாப்புக் கவசம் அல்ல.
இப்போது கடைசியாக படித்த செய்தி. சிங்கப்பூர் நாடு நமக்கு அருகில் உள்ள நாடு. அங்கு தடுப்பூசி போட்டவர்களில் 30 விழுக்காடு மக்கள் மரணமடைந்திருக்கின்றனர். அதற்கு அந்த தொற்று மட்டும் தான் காரணம் என்பதல்ல. பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இப்போது இந்த தொற்று முன்னணியில் இருப்பதால் அது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் எச்சரிக்கையாய் இருங்கள் என்பது தான் செய்தி.
பக்தர்களே! திருவிழா என்பது நல்ல காரியம் தான். அதற்காக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மறந்து விடாதீர்கள். இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். முகக் கவசத்தை அணிந்து கொள்ளுங்கள். நெருக்கத்தைத் தவிருங்கள். மக்கள் கூடுகின்ற இடங்களைத் தள்ளி வையுங்கள்.
முடிந்தவரை தனித்திருங்கள்! திருவிழா வாழ்த்துகள்!
No comments:
Post a Comment