Saturday 8 January 2022

அவதூறுகளைப் பரப்ப வேண்டாம்!

 

                                                        காலணி அணியவில்லை!

நமக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரைப் பற்றி அவர் என்ன செய்கிறார், அவர் அங்கே போகிறார், வருகிறார் என்பதையெல்லாம் அவரைப் பின்பற்றிக் கொண்டே இருப்போம்! அதனை நாம் நல்ல எண்ணத்தோடு செய்யவில்லை! அவரைப்பற்றி ஏதாவது குற்றம் சாட்ட வேண்டும் என்பதற்காக அதனைச் செய்கிறோம்! அது மனித இயல்பு!

நமக்கு ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஹலிமா சாடிக் ஏதோ ஒரு வகையில் பிடிக்கவில்லை! குறிப்பாக மித்ரா நிதியை தவறாகக் கையாண்டார் என்கிற குற்றச்சாட்டு அவர்மீது நமக்கு உண்டு. இந்தியர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதியை ம.இ.,கா.வினரோடு பங்கு போட்டுக் கொண்டார் என்பது நமது குற்றச்சாட்டு! ஆனால் அதற்கெல்லாம் சரியான ஆதாரம் இல்லை!  ஏதோ அந்த இடத்தில் அவர் இருக்கிறார் என்பதற்காக அவர் மீது அந்த பழி விழுகிறது! எது உண்மை எது பொய் என்பது நமக்குத் தெரிய நியாயமில்லை!

சமீபத்தில் ஹலிமா சாடிக் பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு பால தண்டாயுதபாணி ஆலயத்திற்கு வருகை புரிந்தார். அமைச்சர்கள் பலர் இப்படி கோயில்களுக்கு வருவதெல்லாம் ஒன்றும் புதுமை இல்லை! இப்போதுள்ள குற்றச்சாட்டு என்ன வென்றால் அவர் கோயிலுக்குள் காலணி அணிந்து சென்றார் என்பதாக ஒரு குற்றச்சாட்டு!

ஆனால் இதனை இந்து அறப்பணி வாரியம் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்பதாக  மறுத்துள்ளது. அமைச்சர் கணுக்கால் வரையிலான காலுறை அணிந்திருந்தார் என்று உறுதிப்படுத்துகிறது அறப்பணி வாரியம்.   காலணி அணிந்திருந்தார்  என்பதாக தவறான படங்களைப்   போட்டு தவறான நபர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்படும் செய்திகளில் உண்மையில்லை என்கிறது அறவாரியம்.

தவறான செய்திகளைப் பரப்பும் தரப்பினர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்து கோயில்களுக்குப் போகிறவர்கள் காலணி அணியக்கூடாது என்பதை இந்துக்கள் அல்லாதவர்களும் அறிந்து வைத்திருக்கின்றனர்.  காலணி அணிந்து கொண்டு போனார் என்று சொன்னாலும் யாரும் நமபப்போவதில்லை. ஆனாலும் அவரைப்பற்றி அவதூறு பரப்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் எதையாவது இப்படி உளறிக்கொண்டு தான் இருப்பார்கள்!

இதைத்தான் நாம் சொல்ல முடியும். தயவு செய்து அவதுறூகளைப் பரப்ப வேண்டாம். அதுவும் கோவில் விஷயம் என்பதெல்லாம் கேலிக்குறியது அல்ல. கோவில்களோ, ஆலயங்களோ, பள்ளிவாசல்களோ மற்ற வழிபாட்டுத்தலங்களோ எதுவாக இருந்தாலும் அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொரு மலேசியரும் அறிவர். நாம் விரும்பியபடி நடந்து கொள்ள இயலாது!

தயவு செய்து அவதூறூகளைப் பரப்ப வேண்டாம்!

No comments:

Post a Comment