நாட்டின் பிரதமர் டாக்டர் மகாதிர். ஜாதி பற்றி பேசி சர்ச்சையைக் கிளப்புவது அவருடைய வயதுக்கும், தகுதிக்கும் எந்த விதத்திலும் பொருத்தமாக இல்லை.
அவர் என்ன பேசுகிறார் என்பது அவருக்குத் தெரியும். ஒரு மலாய்க்காரராகவும் அவருக்குத் தெரியும். ஓர் இந்தியராகவும் அவருக்குத் தெரியும். சிங்கப்பூரில் மருத்துவம் படித்த போது தன்னை இந்தியர் என்பதாகத் தானே அடையாளம் காட்டியிருக்கிறார்!
ஆனாலும் இப்படி அவர் பேசியிருப்பது வேறு மாதிரியான சந்தேகங்களை எழுப்புகிறது. சமீபகாலமாக இந்தியர்களின் மேல் அவருக்குக் கொஞ்சம் கோபம் அதிகமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது.
இஸ்லாமிய சமயப் போதகர் ஜாகிர் நாயக் மேல் தொடர்ந்தாற் போல இந்தியர்களால் விமர்சிக்கப்பட்டு வருவதை அவர் விரும்பவில்லை. என்ன தான் பிரதமர் சட்ட திட்டங்களைப் பற்றி பேசினாலும், தனிப்பட்ட முறையில், ஓர் இஸ்லாமிய அறிஞர் பிற மதத்தினரால் தொடர்ச்சியாக தாக்கப்படுவதை அவர் விரும்பவில்லை!
அதோடு சேர்ந்து இன்னொரு விஷயமும் அவரது கோபத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. ஜாவி எழுத்தின் மீது இந்திய இயக்கங்கள் ஒன்று சேர்ந்து கடுமையான கண்டனங்களை எழுப்பியிருக்கின்றன. பிள்ளைகளை நாங்கள் பள்ளிகளுக்கு அனுப்பமாட்டோம் என்று சொல்லுகின்ற அளவுக்கு அந்தப் பிரச்சனை வெடித்திருக்கிறது! வீதி ஆர்ப்பாட்டங்கள் வரை சென்றிருக்கிறது!
இந்தப் பிரச்சனைகள் எல்லாம் இந்தியர்கள் மீது பிரதமருக்கு, கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று நம்பலாம்.
ஜாகிர் நாயக், ஜாவி எழுத்து மீதான பிரச்சனை இந்திய சமுதாயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வேளையில் பிரச்சனையைத் திசை திருப்ப அவர் வேண்டுமென்றே "பறையா" என்கிற சொல்லை வலிந்து திணித்திருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது. அந்த இடத்தில் அப்படி ஒரு வார்த்தையைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் நேற்று முளைத்த விளையாட்டுத் துறை அமைச்சர், சைட் சாடிக் "முட்டாள்கள்" என்று கூறி இருப்பதும், இது எங்கிருந்தோ திடீரென வந்த சொற்கள் அல்ல. இந்தியர்களை மட்டம் தட்டுவதே இவர்களின் நோக்கம் என்றே தோன்றுகிறது. இந்தியர்களின் மீதான கவனத்தை வேறு திசைக்குத் திருப்பவே இவர்கள் இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்திருக்கின்றனர்!
பிரச்சனையை என்ன தான் திசை திருப்ப நினைத்தாலும் ஜாகிர் நாயக், ஜாவி எழுத்து, இவை இரண்டும் நாம் மறக்கக்கூடிய பிரச்சனைகள் அல்ல.
பிரதமர் இப்படி பேசியதை நம்மால் வரவேற்க முடியாது. நாட்டின் தலைமை பீடத்தில் உள்ள ஒருவருக்கு சில வரைமுறைகள் உண்டு. எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்று கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் ஆட்சியில் உள்ளவர்கள் சீனர்கள், இந்தியர்கள் என்று பாகபாடு காட்டிப் பேசுகின்றனர்! இந்தப் பாகுபாட்டில் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்!
பேசிவிட்ட பிறகு "இப்படி பேசாலாமா?" என்று பட்டிமன்றம் போடுவதில் பயனில்லை! இனி இது தேவை இல்லை என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?
No comments:
Post a Comment