இப்போது நடப்பது என்பது ஒரு கூட்டணி அரசாங்கம் தான். பல கட்சிகள் சேர்ந்து தான் இந்த ஆட்சியை அமைத்திருக்கின்றன.
ஆனாலும் நடப்பது என்னவோ முன்னாள் ஆட்சியில் என்ன நடந்ததோ அதுவே தொடர்வதாகவே தோன்றுகிறது. முன்னாள் பாரிசான் ஆட்சியில் அம்னோ கட்சியினர் தன்மூப்புத்தனமாக என்ன செய்தார்களோ அதுவே தான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு வேளை அது பிரதமர் மகாதீரின் பழக்க தோஷமோ என்னவோ, தெரியவில்லை! அப்போது நடந்ததும் ஒரு கூட்டணி ஆட்சி தான். அப்போதும் சீனர்களையோ, இந்தியர்களையோ பிரச்சனைகளுக்குக் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் என்னும் அக்கறைஅன்றைய அம்னோ தரப்பினருக்கு வந்ததில்லை! இப்போதும் டாக்டர் மகாதிர் அந்த பாணியையே பின்பற்றுவது நமக்குச் சரியானதாகப் படவில்லை.
அவரின் நோக்கம் என்னவென்பது நமக்குப் புரிகிறது. மலாய்க்காரர்களின் அதிகாரம் என்றென்றும் தோடர வேண்டும் என நினைக்கிறார். எப்படிப் பார்த்தாலும் அவர்களுடைய அதிகாரம் குறைய வாய்ப்பில்லை. ஆனாலும் அப்படி ஒரு பயம் அவரிடம் இருக்கிறது! அதனால் தான் ஏற்றுக்கொள்ள முடியாத அரபு சித்திரக்கலை எழுத்துக்களை சீன, தமிழ்ப்பள்ளிகளில் புகுத்த வலிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்.
ஆனால் இது பற்றி முடிவெடுக்க வேண்டியது கல்வி அமைச்சரோ, பிரதமரோ அல்ல. முதலில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனைப் பெற்றிருக்க வேண்டும். தனிப்பட்ட தலைவர்களின் விருப்பு, வெறுப்பு அல்ல இங்கு முக்கியம். ஆனால் அதுதான் நடந்திருக்கிறது.
நடந்த முடிந்த பொதுத் தேர்தலில் அனைத்துத் தலைவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல விஷயங்கள் இன்னும் நடைமுறைக்குக் கொண்டு வர முடியவில்லை. இது அவர்களின் இயலாமையா? அல்லது முந்தைய அரசாங்கம் செயததே சரி என்று இவர்கள் ஏற்றுக் கொண்டனரா? அதனை ஒட்டியே அனைத்தையும் கிடப்பில் போட்டுவிட்டனரா?
நாம் டாக்டர் மகாதீரை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அவர் செய்கின்ற காரியங்கள் சீன, இந்திய இனத்தவர்களுக்குப் பாதகமாக அமைந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் அறியாதவரா? முன்பு அவர் பிரதமராக இருந்த போது என்ன தவறுகள் செய்தாரோ அதனையே இப்போதும் செய்வது ஏற்றுக்கொள்ளுவதாக இல்லை!
இப்போது நடப்பது கூட்டணி ஆட்சி என்பதை விட முன்பு போலவே பிரதமர் மகாதீரின் சர்வாதிகார ஆட்சி என்று தான் சொல்ல வேண்டி உள்ளது!
No comments:
Post a Comment