Friday 30 August 2019

வாழ்த்துகிறேன் அமைச்சரே!

வீட்டுடைமை ஊராட்சி மன்ற  அமைச்சர் ஸூரைடா கமாருடின் பாராட்டப்பட வேண்டியவர்!

உண்மையை உண்மை என்று எந்தக் காலத்திலும் அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்ளுவதில்லை என்பது ஒன்றும் அதிசயமல்ல. முடிந்தால் அந்த செய்தியைக் கூட வெளி வராமல் இரகசியம் காப்பார்கள்!

ஆனால் அமைச்சர் ஸூரைடா வித்தியாசமானப் பெண்மணி. நாட்டின் வறுமையின் விகிதம் அதிகம் என்கிறது ஐ.நா. சபை. பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி 2016-ம் ஆண்டு நாட்டின் வறுமை விகிதம் 0.4% என்கிறார். ஆனால் ஐ.நா. சபை தற்போதைய அதன் அறிக்கையில் மலேசியாவின் வறுமை விகிதம் 15% என்பதாக அறிவித்திருக்கிறது.

இரண்டிலுமே குறைபாடுகள் இருக்கலாம்.  சரியான புள்ளி விபரங்கள் இல்லாத நிலையில் நாம் 15 விழுக்காடு என்பதையே எடுத்துக் கொள்ளுவோம். ஆட்சேபணை இல்லை!

ஆனால் அமைச்சர் ஸூரைடா அதனை எடுத்துக் கொண்ட விதம் பாராட்டத்தக்கதாக இருக்கிறது. அந்த தகவலை அவர் நேர்மறையாகவே எடுத்துக் கொண்டார்.  

"அந்தச் செய்தியை நாம் நேர்மறையாகவே எடுத்துக் கொள்ளுவோம். நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் ஏழ்மையை ஒழிக்க வேண்டும். ஏழைகளின் முன்னேற்றத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்" என்பது தான் அமைச்சருடைய எதிரொலியாக அமைந்தது.

அமைச்சரின் பார்வை சரியான பார்வை. வறுமை எந்த ஒரு வகையிலும் எந்த ஒரு நாட்டிலும் தேவை இல்லாத ஒன்று. அதனை ஒழிக்க வேண்டும்.  தொடர விடக் கூடாது.

இந்த நேரத்தில் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஏழைகளை வாழ வைக்கிறோம் என்று சொல்லி அவர்களுக்கு இலவசங்களை அள்ளி வீசக் கூடாது! இது வறுமை ஒழிப்பு அல்ல. அரசியல் விளம்பரம். பிரிம் போன்ற பண உதவி ஏழ்மையை ஒழிக்க உதவாது.

ஏழ்மையை  விரட்ட ஆக்ககராமான முறையில் அரசாங்கம் செயல்பட வேண்டும். முதல் வேலை படித்தவனோ, படிக்காதவனோ, பண்டிதனோ பாமரனோ,  அனவருக்கும் வேலை வேண்டும். தங்களது பிழைப்பு நடக்க அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.  வயிற்றுக்குச் சாப்பாடு இல்லை என்றால் யாரும் செயல் பட முடியாது. அதனால் வேலை வாய்ப்புக்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். 

நிச்சயமாக ஏழைகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அரசாங்கம் வைத்திருக்கும்.  அவைகள் நிறைவேற்றினாலே  ஏழ்மை ஒழியும்.

நாம் இங்கு சொல்ல வருவதெல்லாம் ஒரு எதிர்மறையான செய்தியைக் கூட நேர்மறையாக எடுத்துக் கொண்ட அமைச்சரை பாராட்டத்தான்!  அனைத்து அமைச்சர்களுக்கும் ஸூரைடா ஒரு எடுத்துக் காட்டாக இருக்கிறார் என்பதை சொல்லத்தான்!

மீண்டும் வாழ்த்துகிறேன் அமைச்சரே!

No comments:

Post a Comment