Thursday 15 August 2019

இதையும் யோசிக்கலாமே..!

சமீபத்தில் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். 

அங்கு ஓர் அனுபவம்.  அதனைப்   பகிர்ந்து கொள்ளுவது நல்லது என்று நினைக்கிறேன். மற்றவர்களும் பின்பற்றலாம். தவறில்லை.

 ஒர் சீனப் பெண்மனி. இளம் தாய். தனது இரணடு பிள்ளைகளுடன்  மருத்துவமனைக்கு வந்திருந்தார்.  அந்தக் குழந்தைகள் பள்ளிக்கூடம் போகுபவர்கள் அல்ல.   இரு குழந்தைகளும் முதுகில் பள்ளிக்கூட பைகளைச் சுமந்து கொண்டு வந்திருந்தனர்!   அதில் ஒன்றும் ஆச்சரியம் அல்ல.  இப்போது எல்லாக் குழந்தைகளும் அப்படித்தான் பைகளைச் சுமந்து கொண்டு வருகின்றனர். பள்ளிக்கூடம் போகும் வரை காத்திருப்பதில்லை! சரி, அது ஒரு பயிற்சியாகவே இருக்கட்டும்!

அவர்களின் தாய் ஏதோ ஒரு சிகிச்சைக்காக வந்திருந்தார். அவர் கொஞ்சம் வேலையாக இருந்தார். இந்த இரு குழந்தைகளும்  காலியாக இருந்த இருக்கைகளில்  அவர்களின் பள்ளிக்கூட பைகளைத் திறந்தனர்.  உள்ளே இருந்த நோட்டுப் புத்தகத்தை வெளியே எடுத்தனர்.  தங்களது பென்சில் டப்பாக்களைத் திறந்தனர். பென்சில், ரப்பர், ரூலர் என்று அனைத்தையும் வெளியே எடுத்தனர்.  உடனே எழுத ஆரம்பித்து விட்டனர்! இன்னும் பள்ளிக்கூடம் போகாத குழந்தைகள் என்று சொன்னேன். அதனால் பெரிதாக ஒன்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஏதோ வட்டங்கள், கோடுகள் என்று வரைந்து கொண்டிருந்தனர்! இது ஒரு நல்ல பயிற்சியாகவே நான் நினைக்கிறேன்.  பிள்ளைகள் கல்வியில் கவனம் செலுத்த இது ஒரு நல்ல ஆரம்பம்.

நம் இளம் பெற்றோர்கள் இப்படி செய்வதை நான் பார்த்ததில்லை.   அவர்கள் செய்வதெல்லாம் குழந்தைகளிடம் ஒரு கைப்பேசியைக் கொடுத்து விடுகின்றனர். அது போதும். அந்தக் குழந்தைகள் ஆடாமல் அசையாமல் அப்படியே உட்கார்ந்து விடுகின்றனர்!  வேறெதுவும் வேண்டாம்.  அந்தக் குழந்தைகள் உலகையே மறந்து போகின்றனர்.  அது வயதான பின்னரும் தொடர்கிறது என்பது தான் சோகம்.

ஆனால் குழந்தைகளுக்கு வேறு விதமான ஒரு பயிற்சியை அவர்களது தாயார்  அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்,  வரவேற்க வேண்டிய ஒரு பயிற்சி.  கைப்பேசிகளைக் கொடுப்பதை விட இப்படி புத்தகங்களைக் கொடுத்தால்  அவர்களைக் கல்வியை நோக்கி கவனம் செலுத்த ஒரு பயிற்சியாக அமையும்.

நல்லது என்று நினைப்பவர்கள் இதனைச் செய்யலாம்.  எனது கௌரவத்திற்கு  கைப்பேசி தான்  வாங்கிக் கொடுப்பேன் என்று அடம் பிடித்தால்  பிற்காலத்தில் அவதிப் பட வேண்டி வரும் என்பதை மறவாதீர்கள். 

நம்மைச் சுற்றி இருப்பவர்கள், குறிப்பாகச் சீனர்கள், நல்லதைச் செய்தால் நாமும் அதனைப் பின் பற்றுவோம். எல்லாமே நமது பிள்ளைகளின் வளமான எதிர்காலத்துக்குத் தான். பிள்ளைகளின் கல்வியில் அதிகமான அக்கறை உள்ளவர்கள் சீனர்கள்.  நமக்கும் தான் அக்கறை உண்டு. 

சரி என்றால் பின்பற்றலாமே!

No comments:

Post a Comment