Friday 9 August 2019

கொஞ்சம் விட்டுக் கொடுங்கள்..!

தொழிற்கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மனிதவள அமைச்சு எடுத்துக் கொண்டு வருவதை நம்மால் அறிய முடிகிறது.

வரவேற்கிறோம்.  கடந்த காலங்களில் இந்திய மாணவர்கள் அரசாங்க தொழில்பயிற்சி கல்லூரிகளில் திண்டப்படாதவர்கள் போல் ஒதுக்கப்பட்டனர். தகுதி இருந்தும் தகுதியற்றவர்கள் போல் நடத்தப்பட்டனர்.  

அது ஒரு காலம். இப்போது தான் காலம் கனிந்திருக்கிறது.  நமது மாணவர்கள் வாய்ப்புக்களைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் நமது பரிந்துரை.  

இனி மேலும் தாத்தா பாட்டி கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.  வாய்ப்புக்கள் வாசல் கதவைத் தட்டும் போது அதனைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய மாணவர்களின் நலனுக்காக பலர் வாதாடிக் கொண்டும், போராடிக் கொண்டும் இருக்கின்றனர். குற்றம் சொல்லிக் கொண்டும் குறை சொல்லிக் கொண்டும் இருப்பதை விட வாய்ப்புக்கள் கொடுக்கப்படும் போது ஏற்றுக் கொள்ளுங்கள்!

இந்த நேரத்தில் பினாங்கு உரிமைக்குரல் இயக்கத்தின் தலைவர் க.இராமன் சொன்ன ஒரு கருத்தை வரவேற்கிறோம். தொழில் பயிற்சி பயில மாணவர்கள் தேசிய மொழி தேர்ச்சி பெற வேண்டும் என்னும் விதியை தளர்த்த வேண்டும் என்னும் கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.  அவர்கள் தேசிய மொழியில் தேர்ச்சி பெறாததற்குப் பல காரணங்கள் உண்டு. தேர்ச்சி பெறவில்லை என்கிற ஒரே காரணத்திற்காக  அவர்களின் எதிர்காலத்தை வீணடிப்பது என்பது யாருக்கும் நல்லதல்ல.  அவர்கள் ஒன்றும் மருத்துவம் படிக்கவில்லை. அல்லது இன்னும் உயர்தரக் கல்விக்குப் போட்டிப் போடவில்லை. தேவை எல்லாம் அவர்களுக்கென்று ஒரு கைத்தொழில். அது அவர்களின் பிழைப்புக்காக.  இதற்குப் போய்  தேசிய மொழி தேர்ச்சி என்பதெல்லாம் தேவையற்றதாகவே நான் கருதுகிறேன். 

இன்று நிறுவனங்கள் புதியவர்களை வேலைக்கு எடுக்கும் போது அவர்கள் எஸ்.பி.எம். வரை கல்வி பயின்றிருக்கிறார்களா என்பதே முக்கியமாகப் பார்க்கின்றனர். அந்த நடைமுறையே கல்வி அமைச்சோ/மனிதவள அமைச்சோ பின் பற்ற வேண்டும். அதுவே சரியான நடைமுறையாய் இருக்கும்.

இதனை அரசாங்கம் கொஞ்சம் விட்டுக் கொடுக்க  வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

No comments:

Post a Comment