Monday 26 August 2019

புத்துசாலி நண்பர்...!

நண்பர் ஒருவருடன் நீண்ட நாள் பழக்கம்.  

இவர் கொஞ்சம் வித்தியாசமான மனிதர். பார்ப்பதற்கு "ஏண்டா! மச மசன்னு இருக்கே!"  என்று நாம் சொல்லுகின்ற அல்லது நினைக்கின்ற மாதிரி மனிதர். அவர் அப்படித்தான் இருப்பார். அவரது தோற்றமும் அப்படிதான் இருக்கும். மிகவும் சாது.  அதிர்ந்து பேசுவது, கோபமாகப் பேசுவது = இதெல்லாம் அவருக்கு இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை! காரணம் நான் அவரை அப்படிப் பார்த்ததில்லை!

ஆனால் ஏதோ அப்பாவி போல் தோற்றமளிக்கும் அவரைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. 

அவர் அரசாங்க வேலையில் இருந்தவர். சனி ஞாயிறு களில் விடுமுறை. அன்று அவர் சும்மா இருக்க மாட்டார்.  சொந்தமாகவே புல் வெட்டும் இயந்திரம் வைத்திருக்கிறார். .  புல் வெட்டுவதற்கு அவர் வீட்டு முன் புல் ஒன்றும் இல்லை!  ஆனால் வீடுகளில் புல் வெட்டுவதை பகுதி நேர தொழிலாக செய்து வந்தார். அவருக்கென்று சில வாடிக்கையாளர்கள் இருந்தனர். அதனால் அந்தத் தொழில் எந்த இடையூறின்றி சிறப்பாகவே நடந்து வந்தது.  கோயில் திருவிழா காலங்களில் இலவசமாகவெ கோயிலைச் சுற்றி புல் வெட்டிக் கொடுப்பார்.அது நமது கடமை என்பார்.

ஒரு விஷயம் நிச்சயம். அவரால் வீட்டில் சும்மா பொழுதைக் கழிக்க முடியாது.  ஏதாவது ஒரு வேலையை வைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்பார். வெட்டிப் பேச்சு என்பதெல்லாம் அவர் அகராதியில் இல்லை!

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தான் அவர் வேலையிலிருந்து  ஓய்வு பெற்றார். சாலை ஒரத்தில் ஒரு சிறிய தகரகக் கொட்டகை  உணவகத்தை வாடகைக்கு எடுத்து உணவகத் தொழிலை ஆரம்பித்து விட்டார்! எதிர்பார்த்த சூடு பிடிக்கவில்லை.  அவருடைய இலக்கை அடைய நேரடியாகவே வாடிக்கையாளர்களைத் தேடி நகர ஆரம்பித்தார். இப்போது சூடு பிடித்துவிட்டது. நேரம் தான் போதவில்லை!

இவர் ஒரு வெற்றிக் கதை. ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் ஓய்வு நேரத்தை பொருளாதார வெற்றிக்காக உழைக்கின்ற ஒரு மனிதர்.

நமது சமுதாயத்திற்கு இவரைப் போன்ற மனிதர்களே தேவைப்படுகின்றனர்.  பொருளாதார  ரீதியில் நாம் வெற்றி பெறாத வரை நம்மை ஒரு நாயும் சீண்டாது! நம்மைச் சுற்றி அது தான் நடந்து கொண்டிருக்கிறது!  பொருளாதார வெற்றி பெற்றவனுக்குக் கிடைக்கின்ற மரியாதையும் வரவேற்பும் வேறு யாருக்கும் கிடைப்பதில்லை என்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல.

பொருளாதார வெற்றி என்பது நமது சமுதாயத்திற்கு மிக மிக அவசியமான ஒன்று. ஒரு பிச்சைக்கார சமுதாயம் என்று பெயர் எடுத்து விட்டோம். ஆமாம் எடுத்தெற்கெல்லாம் அரசாங்க உதவி.  எல்லாக் காலங்களிலும் உதவி! உதவி என்ற கூப்பாடு!   குடிகாரன் என்று பெயர் எடுத்து விட்டோம்! நமது சமுதாயம் அழிந்ததே, அழிந்து கொண்டு இருப்பதே குடியில் தானே! குடித்து, குடித்து குப்பையாகி போனோம்! குடியினால் ஒருவன் அழிந்தால் பரவாயில்லை. ஆனால் அவன் குடும்பமே அழிகிறதே!

அதனால் தான் சொல்லுகிறேன். உங்களுடைய  பொருளாதரா வெற்றி என்பது இந்த சமுதாயத்தை தலை நிமிரச் செய்யும். பொருளாதார வெற்றி என்பது இந்த சமுதாயத்தின் வெற்றி!

மேலே சொன்ன அந்த புத்திசாலி நண்பரைப் போல ஒவ்வொரும் பொருளாதாரத்தை நோக்கி வெற்றி நடை போடுவோம்!

வெற்றி நமதே!

No comments:

Post a Comment