Monday 12 August 2019

வழக்கம் போல....புரியவில்லை!


சமீபத்தில் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அரபு சித்திர எழுத்தைப் பற்றி பேச்சு வந்தது.

அந்த மனிதர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.  "நாலு பேரு மந்திரியா இருக்கானுங்க! ! ஒருத்தன் கூட வாயைத் திறக்க மாட்டேங்கிறான்! அப்பெல்லாம்  "சாமிவேலு! சாமிவேலு!" ந்னு கத்திக்கிட்டு  கிடந்தானுங்க! இப்ப எங்கே  போனானுங்க?" 

கொஞ்சம் காரசாரமாகத் தான் அவரது பேச்சு இருந்தது!  நானும் "சாமிவேலு! சாமிவேலு!" என்று கத்தியவன் தான்.  இப்போதும் அப்படித்தான்!  ஆனால் நான் கல்வியாளன் அல்ல!  இந்த நாலு பேரும் வாய்த் திறப்பதில்லை என்பதில் ந்மக்கு எந்தக் கருத்து வேறுபாடில்லை!

ஆனால் இப்போது இந்தப் பிரச்சனை திசை திரும்புகிறது! செகாமட், நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சந்தாரா இந்த ஜாவி எழுத்துமுறை 2014 ஆண்டே தமிழ்ப்பள்ளிகளில் ஆரம்பித்து விட்டதாகக் கூறுகிறார்! அப்போதே நான்காம் வகுப்புக்களில் இது நடைமுறைக்கு வந்துவிட்டது எனக் கூறுகிறார் சந்தாரா!  அப்போது பதவிலிருந்த ம.இ.கா.வினர், துணைக்கல்வி அமைச்சராக இருந்த கமலநாதன் உட்பட, இதற்கு ஆதரவாக இருந்து செயல்படுத்தத் தொடங்கி விட்டனர்!  அவர்கள் அதனை அமைதியாக இருந்து காரியம் சாதித்தனர். இப்போது கொஞ்சம் தவளைகள் சத்தம் அதிகம். அதனால் அது வெளி வந்துவிட்டது. அவ்வளவு தான்!

இப்போது  சந்தாரா சொல்லுவது சரியா என்று தான் நமக்குத் தெரிய வேண்டும்.  காரணம் தலைமையாசிரியர்கள் வேறு சில காரணங்களை வைத்திருப்பார்கள். நான்காம் வகுப்பு பாட நூலில் வந்து விட்டது என்றாலும் அது படித்துக் கொடுக்க ஆளில்லாததால் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது என்கிற பதில் அங்கிருந்து வரலாம்! அப்படி ஒரு பதில் வந்தால்  இனிமேலும் அப்படியே செய்து விட்டுப் போங்களேன்  என்று நாமும் சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகலாம்!

ஒன்றும் தெரியாத நிலையில் எல்லாரும் சேர்ந்து கொண்டு  அறிக்கை விடுவதில் பயனில்லை.  அறிக்கை விடுபவர்கள் எவரும் ஆசிரியர்களாக இல்லை!  அப்படி இருக்கும் போது உண்மை நிலை என்ன என்பது நமக்குத் தெரிய வேண்டும். தெரிந்தால் தான் ஆக்ககரமாக ஏதாவது செய்ய முடியும்.

மேலே நான் குறிப்பிட்டவர் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர். அவர் அது பற்றி ஒன்றும் வாய்த் திறக்கவில்லை. அவர் எதையோ மூடி மறைக்கிறார் என்று நான் நம்பவில்லை.  அதற்கான காரணங்கள் ஏதோ உண்டு. இன்னும் சில தினங்களில் அதுவும் தெரிந்து விடும்.

அது வரை வழக்கம் போல...ஒன்னுமே  புரியலே!


No comments:

Post a Comment