என்ன தான் சொல்லுங்கள். இந்த இனம், தமிழினம், எந்தக் காலத்திலும் வீழ்ச்சியுற வாய்ப்பேயில்லை!
கொஞ்சம் தொய்வு ஏற்படலாம். வீழ்வது போல இருக்கலாம். ஆனால் வீழாது. தளர்ச்சி ஏற்படலாம். ஆனால் துளிர்த்து விடும்1 அது தான் தமிழினம்!
ஒரு சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் வந்திருந்தார். கொஞ்சம் கணிணி வேலை. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தமிழ் மொழி படித்து கொடுப்பதாக கூறினார். தமிழ் தெரியாத பெரியவர்கள், கொஞ்சம் இளைஞர்கள் இவர்களுக்காக பாடம் நடத்துகிறார். இவர் மட்டும் அல்ல. இவரோடு சேர்ந்து இன்னும் சில தமிழ் தெரிந்தவர்கள். இவர்கள் ஆசிரியர்கள் அல்ல. தங்களுக்குத் தெரிந்த தமிழை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
உண்மையில் அது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இது போன்று வகுப்புகள் நடத்த எல்லாக் காலத்திலும் ஆசிரியர்களையே எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் மாணவர்களுக்குப் பாடம் நடத்துபவர்கள். பரிட்சைகளுக்கு மாணவர்களைத் தயார் செய்பவர்கள்.
மொழியைக் கற்றுக் கொடுக்க எல்லாத் தரப்பிலிருந்தும் அக்கறை எடுக்க வேண்டும். மொழியில் பெரும் அளவில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்பதல்ல. சராசரி நடமுறைத் தமிழே போதுமானது. நமது நோக்கம் அவர்கள் மொழியில் பாண்டித்தியம் பெற வேண்டும் என்பதல்ல. அப்படி பெற வேண்டுமானலும் அதற்கான வாய்ப்புக்கள் இப்போது நிறையவே இருக்கின்றன. நமது நோக்கம் அவர்கள் நாளிதழ்கள், புத்தகங்கள், கட்டுரைகள் படிக்கின்ற அளவுக்கு அவர்களை நாம் தயார் செய்தால் போதும்.
நாம் சொல்ல வருவதெல்லாம் அவர்கள் தமிழர்கள் என்கிற அடையாளத்தை விட்டுவிடாக் கூடாது என்பது தான். அந்த அடையாளம் தொடர வேண்டும்.
தாய் மொழி தெரிந்த இனம் என்றும் நசிந்து போனதில்லை. அந்த மொழி அவர்களைக் காப்பாற்றும். நாம் ஐநூறு வருஷத்து மொழியைப் பேசவில்லை. ஐயாயிரம் வருஷத்தை மொழியைப் பேசுகிறோம். நம் மொழியியோடு ஒப்பிட எந்த மொழியும் இல்லை என்கிற திமிர் நமக்கு இருக்க வேண்டும். அந்தப் பெருமை நமக்கு இருக்க வேண்டும். தமிழ் எந்தக் காலத்திலும் நம்மைக் கைவிட்டதில்லை. அந்த மொழியைத் தான் நாம் பேசி, எழுதி, அன்றாட அலுவல் மொழியாக பயன்படுத்தி வந்திருக்கிறோம. எந்த ஒரு மொழியையும் நாம் எதிர்க்க வேண்டாம். நமது பிழைப்புக்காக பல மொழிகளை நாம் கற்கிறோம். அவ்வளவு தான்!
நம் மொழி நம்மைத் தாழ்த்தாது, அது நம்மை உயர்த்தும். நாம் தாழ்ந்து போனால் நமது அறிவை நாம் பயன்படுத்தவில்லை என்பது தான் உண்மை. தமிழினம் உயர்ந்த இனம்! அது உயர்ந்தே நிற்கும்!
தமிழால் வளம் பெறுவோம்!
No comments:
Post a Comment