பிரதமர் துறை, துணை அமைச்சர் பொன்.வெதமூர்த்தி ஓரு செய்தியாளர் கூட்டத்தில் "இலாகா மாற்றத்திற்கு நான் தயார்!" என்று கூறியிருப்பது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது!
இதனை நாம் எதிர்பார்க்கவில்லை. பொன்.வேதமூர்த்தி என்றாலே நமக்குத் தெரிந்தது எல்லாம் இந்தியர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஆர்வம் உள்ளவர் மட்டும் அல்ல, பிரச்சனைகளை முற்றிலுமாக அறிந்தவர் என்பது அனைவருக்கும் புரிந்த ஒரு விஷயம்.
மற்ற அமைச்சர்கள் எல்லாம் ஏதோ ஒரு கட்சியின் சார்பில் அமைச்சர்களாக இருப்பவர்கள். அவர்களின் இலாகாவில் மாற்றம் ஏற்பட்டால் அது பிரதமரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று எடுத்துக் கொள்ளலாம். வேதமூர்த்திக்கு மாற்றம் ஏற்பட்டாலும் அதற்கும் பிரதமரே பொறுப்பு.
ஆனால் இங்கு வேறு ஒரு விஷயத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற இந்திய அமைச்சர்களை விட இந்தியர் பிரச்சனையை அதிகம் அறிந்தவர், புரிந்தவர் வேதமூர்த்தி தான். நீண்ட காலம் களத்தில் இருந்தவர். அரசாங்கத்திற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியவர்.
ஆனாலும் பதவிக்கு வந்த பின்னர் அவருடைய போராட்டங்களைப் பற்றி அவருக்கே இப்போது சந்தேகம் வந்து விட்டது. தான் போரடியதெல்லாம் வீணா என்கிற நிலைமைக்கு வந்து விட்டார்!
ஆமாம், பதவி ஏற்கும் போது அவரிடம் இருந்த சுறுசுறுப்பு இப்போது காண முடியவில்லை! தன்னால் எதையும் செய்ய முடியவில்லையே என்று நினைக்கிறாரா அல்லது மக்களை நேருக்கு நேர் சந்திக்கத் தயங்குகிறாரா என்று நமக்கும் புரியவில்லை!
இந்தியர்களின் தொழில் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட மித்ரா அமைப்பின் மூலம் என்ன நடந்தது என்று நமக்கும் புரியவில்லை அவருக்கும் புரியவில்லை! எந்த ஒரு செய்தியும் வெளிப்படுத்தப்பட வில்லை!
இப்போதெல்லாம் அவரைப் பற்றியான செய்திகள் எதுவும் வெளி வருவதும் இல்லை. ஓய்ந்து போனாரா! அல்லது இந்த "இந்தியர் விவகாரம்" மே வேண்டாம் என்று நினைக்கிறாரா! அப்படி ஓர் எண்ணம் அவருக்கு இருக்கிறது என்றால் அவர் ஒரு போராட்டவாதி என்பதெல்லாம் பொய் என்று தான் சொல்ல வேண்டும்!
நமக்குத் தெரிந்தது எல்லாம் வேதமூர்த்தி கை சுத்தமான மனிதர். மித்ரா அமைப்பிலிருந்து கொடுக்கப்பட்ட பணம் தக்கவர்களுக்குக் கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டும். அது நடந்ததா என்று தெரியவில்லை!
நேர்மை மட்டும் தான் பதவிக்கு அழகு. கடந்த ஓராண்டு காலம் அவர் நேர்மையைக் கடைப் பிடித்திருந்தால் அவர் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒன்றை விட்டு ஒன்றுக்குத் தாவ வேண்டிய தேவை இல்லை!
அவர் இந்தியர் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளிலும் தீர்வு காண வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.
உங்கள் மாற்றத்திற்கு நாங்கள் தயாராக இல்லை! இந்தியர்களின் தீர்வுகளை நோக்கி நகருங்கள்! அதுவே நாங்கள் உங்களைக் கெட்டுக் கொள்ளுவது!
No comments:
Post a Comment